AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பாஜக! திமுகவிடம் முக்கிய கோரிக்கை!

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், 22 எம்பிக்களைக் கொண்ட திமுகவின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் நிபந்தனைகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பாஜக! திமுகவிடம் முக்கிய கோரிக்கை!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 09:24 AM IST

நவம்பர் 28, 2026: சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதாக்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

மீண்டும் மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டம்!

நவம்பர் 30ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2029ஆம் ஆண்டு முதல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு இந்த இரண்டு மசோதாக்களும் அவசியம் என மத்திய அரசு கருதுகிறது.

இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அரசியல் வேறுபாடுகளை மறந்து மசோதாக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதரவு அதிகரிப்பதாக பாஜக நம்பிக்கை!

கடந்த ஏப்ரல் மாதம் மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு வந்தபோது 298 எம்பிக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், மசோதா நிறைவேற 361 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 230 பேர் எதிராக வாக்களித்தனர்.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 28 மக்களவை உறுப்பினர்களில் 20 பேர் வெளியேறி புதிய கட்சியில் இணைந்ததாகவும், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாஜக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 9 எம்பிக்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் சென்றதும் பாஜகவுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவிடம் முக்கிய கோரிக்கை

இந்த மசோதாவுக்கு திமுக, சமாஜ்வாதி கட்சி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருகிறது. குறிப்பாக, 22 எம்பிக்களைக் கொண்ட திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கு மத்திய அரசு தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது.. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்

தொகுதி மறுவரையறையின்போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதே திமுகவின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பது தொடர்பான உறுதியையும், தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்குவது தொடர்பான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்கவும் திட்டம்!

மசோதாவுக்கு ஆதரவாகத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்காக, சில எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்கச் செய்வது குறித்தும் பாஜக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையின் தற்போதைய பலம் 540 ஆக உள்ள நிலையில், சில உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தால், மசோதா நிறைவேறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கையும் குறையும் என பாஜக கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சுங்கச்சாவடிகளில் செல்லும்போது வாகன பதிவு எண்ணை மறைத்தால் 5 மடங்கு அபராதம்!

மேலும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்படுகிறது. இதனால் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீண்டும் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us