50 ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை திருடிய வழக்கில் 65 வயது முதியவர் கைது.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
65 Years Old Man Arrested For Stealing 115 Rupees Worth Wheat | மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் சலீம் என்ற 65 வயது நபர். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கோதுமை திருடிய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தார், பிப்ரவரி 09 : மத்திய பிரதேசத்தில் (MP – Madhya Pradesh) 50 ஆண்டுக்ளுக்கு முன்பு திருடிய கோதுமைக்காக முதியவர் ஒருவர் தனது 65வது வயதில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய வழக்குகளை முடித்து வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் தற்போது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கோதுமை திருடிய வழக்கில் முதியவர் 50 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை திருடிய வழக்கில் முதியவர் கைது
1980 ஆம் ஆண்டு பால்சாமுந்த் ககாட் பகுதியில் உள்ள பால்காட் கிராமத்தில் சலீம் என்பவர் உள்ளிட்ட 7 பேர் அந்த பகுதியில் உள்ள கோதுமை வயலில் இருந்து கோதுமை திருடியுள்ளனர். அவர்கள் அந்த தோட்டத்தில் இருந்த சில கிலோகிராம் அளவிலான கோதுமைகளை திருடியுள்ளனர். அதன் மதிப்பு அப்போது ரூ.115 என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சலிம் தனது குடும்பத்துடன் தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : எதிரிகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் திறன்…இந்தியாவுக்கு கிடைத்துள்ளது!
அவர் அங்கு ஒரு சிறிய கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையின் மூலம் தனது வாழ்நாளை கடத்தி வந்த அவர் தனது குடும்பத்தையும் பாதுகாத்து வந்துள்ளார். அவர் காலப்போக்கில் தான் நண்பர்களுடன் இணைந்து கோதுமை திருடியதை மறந்துள்ளார். ஆனால், நிலத்தின் உரிமையாளர் அளித்த புகார் காவல் நிலையத்தில் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
65 வயதில் கைது செய்யப்பட்ட சலீம்
காலப்போக்கில் இந்த வழக்கு மறக்கப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் சலீம் தனது கூட்டாலிகளுடன் கோதுமை திருடிய வழக்கை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். அதன்படி விசாரணை மேற்கொண்ட போலீசார், சலீமை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.