Health Tips: தீக்காயங்களுக்கு டூத் பேஸ்டை தடவுகிறீர்களா..? இந்த தவறை ஏன் செய்யக்கூடாது..!
Toothpaste on Burns: சூடான பாத்திரங்களால் ஏற்படும் தீக்காயங்களுக்கு பலர் பற்பசையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பற்பசையில் உள்ள இரசாயனங்கள் தோல் எரிச்சல், தொற்று, அலர்ஜி மற்றும் குணமடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும். கற்றாழை ஜெல் போன்ற இயற்கை வழிமுறைகள் பாதுகாப்பானவை. எரிச்சல் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

சமையலறையில் (Kitchen) சமைக்கும்போது, சூடான பாத்திரங்கள் எதிர்பாராமல் பட்டு கொப்புளங்களை உண்டாக்கி அதீத எரிச்சலை ஏற்படுத்தும். வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான பெண்கள் அவசர அவசரமாக சமையல் செய்யும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்துகொள்ளாமல் சிலர் உடனடியாக குளியலறையில் வைத்திருக்கும் பற்பசையை (Toothpaste) எடுத்து தீக்காயங்கள் (Burns) மீது பயன்படுத்துகிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் செய்வது உங்களுக்கு பிரச்சனையை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா..? எரிந்த சருமத்தில் டூத் பேஸ்டை பயன்படுத்துவது எரிச்சலைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த பழக்கம் எரிந்த சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தீக்காயமடைந்த சருமத்தில் பற்பசையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
தோல் எரிச்சல் மற்றும் வீக்கம்
டூத் பேஸ்டில் உள்ள மெந்தோல், ஃப்ளோரைடு மற்றும் சவர்க்காரம் போன்ற இரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த பொருட்களை தீக்காயம் அடைந்த சருமத்தில் தடவும்போது, இவை சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுகின்றன. இதனால் கடுமையான எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தொற்று ஆபத்து
டூத் பேஸ்டில் உள்ள கிளிசரால், தீக்காயத்தின் மீது பேஸ்டை உலராமல் தடுக்கிறது. மேலும், இந்த ரசாயனத்தை காயத்தில் தடவுவதன்மூலம் தொற்றுநோயை அதிகரிக்கும். எனவே, தீக்காயமடைந்த தோலில் மீது பேஸ்டை பயன்படுத்துவது நல்லதல்ல.




அலர்ஜி
டூத் பேஸ்டில் உள்ள பல ரசாயனங்கள் தீக்காயத்தின் மீது தடவுவதன்மூலம் அலர்ஜியை ஏற்படுத்தும். குறிப்பாக, சென்சிடீவ் சருமம் கொண்டவர்களுக்கு இது அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது பிற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிகிச்சையில் தாமதம்
டூத் பேஸ்டை தீக்காயத்திற்கு மேலே தடவுவது குளிர்ச்சியான உணர்வை அளிக்கலாம். ஆனால் அது காயத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குவதற்குப் பதிலாக உலர செய்யும். இது சருமத்தின் சரியான குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்கும்.
தோல் சேதம்
டூத் பேஸ்டிலுள்ள pH அளவு சருமத்திற்கு ஏற்றதல்ல. தீயினால் ஏற்பட்ட காயத்தால் எரிச்சல் கடுமையாக இருந்தால், பேஸ்டை பயன்படுத்துவது இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தீக்காயமடைந்த சருமத்தில் என்ன தடவலாம்..?
தீக்காயமடைந்த சருமத்தில் பேஸ்ட்க்கு பதிலாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள பண்புகள் சருமத்தை ஈரப்பதமாக்குவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கின்றன. சாதாரணமாக விட்டாலே தீக்காயங்கள் விரைவாக குணமாகும். தோல் அதிகமாக எரிச்சல் அடைந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.