AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உயிரைக் காக்கும் 30 நொடிகள்: உடலின் ரகசியத்தை உடைக்கும் எளிய நாற்காலி சோதனை!

The 30-Second Chair Test: வீட்டில் உள்ள நாற்காலியில் கைகளைப் பயன்படுத்தாமல் 30 வினாடிகளில் எத்தனை முறை எழுந்து அமர முடிகிறது என்ற எளிய சோதனை மூலம் ஒருவரது கீழ் உடல் தசை வலிமையைக் கண்டறியலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையில் தசை வலிமை குறைவாக இருப்பவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்' இதழ் எச்சரிக்கிறது.

உயிரைக் காக்கும் 30 நொடிகள்: உடலின் ரகசியத்தை உடைக்கும் எளிய நாற்காலி சோதனை!
நாற்காலி சோதனை
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jun 2026 20:57 PM IST

இன்றைய அவசர காலகட்டத்தில் பலரும் தங்களது வெளிப்புற உடல் அமைப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உள் உறுப்புகளின் மற்றும் தசைகளின் உண்மையான வலிமைக்கு கொடுப்பதில்லை. நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிக எளிமையான முறையில், வீட்டிலிருந்தபடியே வெறும் 30 விநாடிகளில் கண்டறிய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒரு நபரின் கைகளின் பிடிமானம் (Grip Strength) மற்றும் அவரது தசைகளின் உறுதித்தன்மை ஆகியவை அவரது ஆயுட்காலத்தையும், எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய் பாதிப்புகளையும் முன்கூட்டியே எச்சரிக்கும் காரணியாக விளங்குவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

30 வினாடி நாற்காலி சோதனை செய்யும் முறை

இந்த பிரத்யேக உடல் தகுதிச் சோதனையை மேற்கொள்வது மிகவும் எளிதானது. இதற்கு மருத்துவமனைக்கோ அல்லது உடற்பயிற்சி கூடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண நாற்காலியில் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர், கைகள் இரண்டையும் நெஞ்சுப் பகுதிக்கு குறுக்காக கட்டிக் கொள்ள வேண்டும். நாற்காலியின் கைகளையோ அல்லது பக்கவாட்டுப் பகுதியையோ எக்காரணம் கொண்டும் தொடாமல், 30 வினாடிகளுக்குள் உங்களால் எத்தனை முறை முழுமையாக எழுந்து அமர முடிகிறது என்பதை துல்லியமாக எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எளிய சோதனை உங்களது இடுப்பு, கால்கள் மற்றும் உடலின் கீழ் பகுதி தசைகளின் வலிமையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

மருத்துவ ஆராய்ச்சியின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள்

பிரபல மருத்துவ இதழான ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ (British Journal of Sports Medicine) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தசை வலிமை மற்றும் நாற்காலியில் இருந்து அவர்கள் எவ்வளவு வேகமாக எழுகிறார்கள் என்பதை சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதில், யாருக்கெல்லாம் தசை வலிமை மிகச் சிறப்பாக இருந்ததோ, அவர்களுக்கு மற்றவர்களை விட அகால மரணம் அடைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாறாக, தசை பலவீனம் உள்ளவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்படுவதற்கான அபாயம் பல மடங்கு அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

வயதான காலத்தில் தசைச் சரிவும் அதன் தாக்கமும்

பொதுவாக மனிதர்களுக்கு வயதாகும்போது உடலில் தசைகளின் அளவு குறைவதை விட, அந்தத் தசைகளின் செயல்பாட்டுத் திறன் மற்றும் சுருங்கி விரியும் வேகம் தான் மிக வேகமாக சரிந்துவிடுகிறது. இதனால் உடலைச் சமநிலைப்படுத்தும் திறன் (Balance) குறைந்து, முதியவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டாகிறது. எந்தவிதமான மருத்துவக் கட்டணமும் இல்லாமல், யாருடைய உதவியும் இன்றி நமது உடலின் உண்மையான ஆரோக்கியத் தரத்தை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த 30 விநாடி நாற்காலி சோதனை ஒரு சிறந்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us