No Added Sugar என்பதற்கும் Sugar Free என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம்?
Sugar Free vs No Added Sugar : கடைகளில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களில் No Added Sugar அல்லது Sugar Free என்ற வார்த்தைகளை பார்த்திருப்போம். நம்மில் பெரும்பாலானோர் இந்த இரண்டு வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் தான் என நினைத்திருப்போம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் உடற்பயிற்சி (Exercise) மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகள் (Health Food Habit)குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உணவுப் பொருட்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சர்க்கரையை குறித்து பலர் குழப்பமடைகிறார்கள். பெரும்பாலும் நீங்கள் பேக்கேஜிங்கில் ‘No Added Sugar’ அல்லது ‘Sugar Free’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கும். நம்மில் பலரும் இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருளைக் குறிக்கின்றன என நினைப்போம். ஆனால் அது அப்படி இல்லை. இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்ன? எந்த பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இன்று இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது எடை குறைக்கும் முயற்சிகளில் இருந்தாலோ இருந்தால் மேற்சொன்ன இரண்டு வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள விரும்பினால், இந்த இரண்டு சொற்களின் அர்த்தத்தையும் புரிந்துகொள்வது உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே ‘சர்க்கரை சேர்க்கப்படாதது’ மற்றும் ‘சர்க்கரை இல்லாதது’ ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம் என்பதையும், யார் எந்தப் பொருளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டு உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அமெரிக்க இதய சங்கத்தின் அறிக்கையில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
No Added Sugar என்றால் என்ன?
No Added Sugar என்று குறிப்பிட்டிருந்தால் வெளியில் இருந்து அந்த உணவுப் பொருளில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்று அர்த்தம். அதாவது, வெள்ளை சர்க்கரையோ அல்லது வெல்லம், தேன் அல்லது சிரப் போன்ற எந்த இனிப்புப் பொருளோ இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதில் உள்ள பிற பொருட்களின் வழியாக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக பழங்கள், பால் அல்லது தானியங்கள் போன்றவற்றிலிருந்து இயற்கையாகவே கிடைக்கும் சர்க்கரையை அந்த உணவுப் பொருள் பெற்றிருக்கலாம். எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால், அத்தகைய பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும்.
Sugar Free என்றால் என்ன?
Sugar Free என்பது அந்த உணவை தயாரிக்கும்போது வழக்கமாக உடலுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சர்க்கரை அந்த உணவில் இல்லை என்பதைக் குறிக்கிறது. மேலும் இதில் இனிப்புக்காக சுக்ரோலோஸ், அஸ்பார்டேம் அல்லது ஸ்டீவியா போன்ற செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இந்த உணவுப்பொருட்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடை குறைக்கும் முயற்சிப்பவர்களுக்காக தயாரிக்கப்படுகின்றன, ஆனால் சில செயற்கை இனிப்புகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.