தினமும் 15 நிமிடம் இயற்கையோடு நடந்தால் நடக்கும் அற்புதம்!
Boost Your Mental Health: இயற்கையோடு நேரத்தைச் செலவிடுவது மனிதர்களின் மனநிலையில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று லண்டனில் உள்ள டெர்பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மைல்ஸ் ரிச்சர்ட்சன் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் ஆன் கெர்ரி ஆகியோர் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது மன அமைதிக்காக பல மைல்கள் தூரம் பயணம் செய்து காடுகளுக்கோ அல்லது மலைப் பிரதேசங்களுக்கோதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் வாழும் நகரப் பகுதிகளிலேயே இருக்கும் பூங்காக்கள் அல்லது மரங்கள் நிறைந்த தெருக்களில் வெறும் 15 நிமிடங்கள் உலா வந்தாலே மன அழுத்தத்தில் இருந்து பெரிய அளவில் விடுபட முடியும் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘நேச்சுரல் கேபிடல் அலையன்ஸ்’ அமைப்பு நடத்திய புதிய மெட்டா-பகுப்பாய்வு (Meta-analysis) உறுதிப்படுத்துகிறது. சுமார் 6,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இயற்கை சூழலில் சிறிது நேரம் நடப்பது கவலை, மனச்சோர்வு, கோபம் மற்றும் சோர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளைக் கணிசமாகக் குறைத்து, புத்துணர்ச்சியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேரத்தை விட முக்கியம் விழிப்புணர்வு: மொபைல் போன்களுக்கு ஓய்வு கொடுங்கள்
இயற்கையுடன் நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை விட, அந்த நேரத்தில் நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு மொபைல் திரையை வெறித்துப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை உற்று நோக்க வேண்டும். இதற்காக ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட்சன் ‘இயற்கையில் மூன்று நல்ல விஷயங்கள்’ (Three Good Things in Nature) என்ற எளிய பயிற்சியைப் பரிந்துரைக்கிறார். தினமும் பறவைகளின் கீதத்தைக் கேட்பது, மரங்களின் வழியே வரும் குளிர்ந்த காற்றை உணர்வது அல்லது பூக்களின் நறுமணத்தை ரசிப்பது போன்ற ஏதேனும் மூன்று விஷயங்களைக் குறித்து வைக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை இதனைச் செய்வதன் மூலம் அடுத்த ஒரு மாதத்திற்கு மன ஆரோக்கியம் சீராக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இயற்கையோடு இணைய ஐந்து வழிகள்: ஐம்புலன்களையும் பயன்படுத்துங்கள்
மனித மூளை இயற்கையை ரசிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியே தெரியும் ஒரு ஒற்றை மரத்தைக் கூட நாம் ரசிக்க முடியும். இயற்கையோடு ஆழமான பிணைப்பை ஏற்படுத்த ஐந்து வழிகளை அறிவியல் பூர்வமாக முன்வைக்கின்றனர். முதலாவதாக, நம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி இயற்கையை உணர வேண்டும். இரண்டாவதாக, இயற்கையின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்து, அது தரும் அமைதியை உள்வாங்க வேண்டும். மூன்றாவதாக, சூரிய அஸ்தமனம் போன்ற இயற்கையின் அழகை புகைப்படமாகவோ அல்லது மனதால் ரசித்தோ பாராட்ட வேண்டும். நான்காவதாக, இயற்கை நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை டைரி எழுதுதல் அல்லது கவிதை மூலம் வெளிப்படுத்த வேண்டும். இறுதியாக, பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது, செடிகளை வளர்ப்பது போன்ற செயல்கள் மூலம் இயற்கைக்கு நாம் ஏதேனும் நன்மைகளைச் செய்ய வேண்டும். இந்த எளிய பழக்கவழக்கங்கள் நம் மனதை நிகழ்காலத்தில் நிலைநிறுத்தி, பெரும் மன நிம்மதியைத் தரும் என்பதில் ஐயமில்லை.