Kidney Health: நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுகிறதா? இது எந்த பாதிப்பின் அறிகுறிகள்..?
Foamy Urine Causes: நுரை போன்ற சிறுநீர் நாள்பட்ட சிறுநீரக நோயின் ஒரு முக்கிய அறிகுறியாகும். சிறுநீரகத்தின் வடிகட்டிகள் சேதமடைந்தால், அவற்றால் புரதத்தை பிடித்து வைக்க முடியாமல் போகும். நுரை போன்ற சிறுநீருடன் உங்கள் கால்களில் வீக்கம், சோர்வு அல்லது பசியின்மை இருந்தால், அது உங்கள் சிறுநீரகங்கள் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும்.
நம் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை நாம் பெரும்பாலும் சாதாரணமாக கடந்து செல்கிறோம். அந்தவகையில், பலரும் சிறுநீரகம் (Kidney) மற்றும் அதிலிருந்து வெளியேறும் சிறுநீரை கவனிப்பது கிடையாது. இப்படியான சூழ்நிலையில், நுரையுடன் கூடிய சிறுநீர் உங்கள் உள் ஆரோக்கியத்தின் குறிப்பிடத்தக்க மாற்றத்தின் அறிகுறிகளை குறிக்கிறது. உங்கள் சிறுநீரில் (Foamy Urine) தொடர்ந்து நுரை வெளியேறுவதை கவனித்தால், அது உங்கள் சிறுநீரக பாதிப்பிற்கான எச்சரிக்கையாக இருக்கலாம். பொதுவாக, சிறுநீர் தெளிவாகவும் நுரை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
ALSO READ: 90 சதவீத பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏன்..? எப்படி சரிசெய்யலாம்?
நுரையுடன் சிறுநீர் வெளியேற காரணம் என்ன..?
நுரை போன்ற சிறுநீர் பெரும்பாலும் புரதச் சத்து உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கிறது. நமது சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி அத்தியாவசிய புரதங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இருப்பினும், சிறுநீரக செயல்பாடு பலவீனமடையும் போது, புரதங்கள் வடிகட்டத் தொடங்குகின்றன. இந்த நிலை சிறுநீரக நோய், சர்க்கரை அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மேலும், அதிகப்படியான நீரிழப்பு சிறுநீரை தடிமனாகவும் நுரையாகவும் மாற்றும். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் முக்கிய உறுப்புகளுக்கு சேதமடைவதை தடுக்கலாம்.




சிறுநீரக நோயின் அறிகுறிகள்:
நுரை போன்ற சிறுநீர் நாள்பட்ட சிறுநீரக நோயின் ஒரு முக்கிய அறிகுறியாகும். சிறுநீரகத்தின் வடிகட்டிகள் சேதமடைந்தால், அவற்றால் புரதத்தை பிடித்து வைக்க முடியாமல் போகும். நுரை போன்ற சிறுநீருடன் உங்கள் கால்களில் வீக்கம், சோர்வு அல்லது பசியின்மை இருந்தால், அது உங்கள் சிறுநீரகங்கள் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண்பது முக்கியம்.
சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் விளைவுகள்:
சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றன. உயர் இரத்த சர்க்கரை சிறுநீரகங்களை அதிகமாக வேலை செய்து, புரதத்தை கசியச் செய்கிறது. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து, உங்கள் சிறுநீரில் நுரை வெளியேறுவதை கண்டால், அது சர்க்கரை நெஃப்ரோபதியின் தொடக்கமாக இருக்கலாம். இதனையும் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
நீரிழப்பு மற்றும் பிற வாழ்க்கை முறை காரணிகள்:
சில நேரங்களில் நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதற்கு நீரிழப்பு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் நாள்முழுவதும் குறைவாக தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீர் குவிந்து, நுரை உருவாக வழிவகுக்கிறது. ஆண்களுக்கு இது பின்னோக்கி விந்து வெளியேறுதல் அல்லது சில மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம். நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் அது சிறுநீரக செயலிழப்புக்கான முதல் படியாக கூட இது இருக்கலாம்.
ALSO READ: குளிர்காலத்தில் வாயு, நெஞ்செரிச்சலா..? இந்த குறிப்புகள் சரிசெய்ய உதவும்!
இதை சரிசெய்ய என்ன செய்யலாம்..?
நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை குறைக்க உங்கள் உணவில் உப்பைக் குறைக்கவும், நிறைய தண்ணீர் குடிக்கவும், உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். இதுமட்டுமின்றி, உங்களுக்கு நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதுடன், மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.