இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை – கருப்பு பட விழாவில் சூர்யா பரபரப்பு பேச்சு
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு பட இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது விழாவில் பேசிய நடிகர் சூர்யா நான் இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்று பேசினார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மே 14, 2026 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய சூர்யா, இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. கருப்பசாமி தான் ஹீரோ என்றார். மேலும் இந்தப் படத்தில் தன்னை நடிக்க வைத்தற்காக இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, மதுரை எனக்கு எப்பொழுதுமே ஸ்பெஷல். உணவு, அரசியல், எல்லாத்துக்கும் மேலாக பெண்களுக்கு மிக மரியாதை கொடுக்கும் ஊர். இந்த மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இங்கு என்னுடைய பல படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த 28 வருடங்கள் இந்த மக்களின் காதல் தான் என்னை ஹீரோவாக வளர்த்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். அது போல கருப்பு திருவிழாவும் இன்னொரு சித்திரை திருவிழா என்றார். நடிகர் இந்திரன் சார் என்னவொரு நடிகர். அவர் மிகச்சிறந்த முன்னுதாரணம். அவர் 4 ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறார். சமீபத்தில் அவர் 7 ஆம் வகுப்பு எழுதியிருக்கிறார். அவரது உழைப்புக்கு எல்லை இல்லை என்றார்.
டிரீம் வாரியர்ஸ் எனக்காக அதிகம் மெனக்கெடுவார்கள். சில நேரம் என்னை விட எனக்காக அதிகம் மெனக்கெடுகிறார்கள். அவர்களுக்கு பிரம்மாண்ட பார்வை இருக்கறது. அவர்கள் இந்த உலகை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அன்பறிவ் மற்றும் விக்ரம் தர்மா மாஷ்டர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
இந்தப் படம் இவ்வளவு தூரம் வந்ததற்கு கருப்பசாமி தான் காரணம் என நான் நம்புகிறேன். தெய்வீகத்தன்மை ஒருவருக்குள் செல்லும்போது என்ன மாற்றம் நடக்கும் என்பதை நான் இந்தப் படம் மூலம் அறிந்துகொண்டேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் மிராக்கிள் நடக்கும். ஆர்ஜே பாலாஜி மல்டி டேலண்டட். நான் என்னை வெறும் சூர்யாவாக தான் பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை நடிகராக, இயக்குநராக, வர்ணனையாளராக பல வடிவங்களில் பார்க்கிறார் என்றார்.
சாய் அபயங்கர் சிறந்த திறமை வாய்ந்த நபர், அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கு. அவரை முதலில் பார்த்தபோது ஒரு நாளை 1000 டியூன் போடுவதாக சொன்னார். அது மிக மிக அபூர்வமானது. இந்தப் படம் திரைக்கு வந்தால் மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. கருப்பசமாமி தான் ஹீரோ. இந்தப் பட்த்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கும் இந்த அளவுக்கு நான் நடிப்பதற்கும் காரணமான என்னுடைய இயக்குநர் ஆர்ஜே பாலாஜி சாருக்கு நன்றி.
இந்தப் படம் பார்த்தவர்கள் முதல் பாதி எமோஷனாலாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி திரையரங்கம் சிதறும் அளவுக்கு காட்சிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர் என்று பேசினார்.