பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?
ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில் தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு முதல்வர் அல்லது அவரது அமைச்சரவை, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் வரை மட்டுமே ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க முடியும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதை விட, சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதே அதன் அதிகாரப்பூர்வமான இருப்பைத் தீர்மானிக்கிறது. தேர்தல் முடிவுகள் ஒரு கட்சியை ஆட்சியின் வாசல் வரை அழைத்துச் செல்லலாம்; ஆனால், சட்டமன்றத்தின் தளத்தில் நிரூபிக்கப்படும் ‘பெரும்பான்மை’ மட்டுமே அந்த அரசு அரியணையில் அமர்வதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது.
பெரும்பான்மை என்றால் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், மொத்த இடங்களில் பாதியை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, 118 என்ற எண்ணிக்கையே தமிழகத்தின் ‘மேஜிக் எண்’ ஆகும். பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் இந்தத் தனிப்பெரும் பலம் கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) அமையும்போது , ஆளுநர் அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்து, பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவார்.
‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ என்றால் என்ன?
ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில்தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே ‘தரைச் சோதனை’ அல்லது ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ என்கிறோம். தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அவருக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் (உதாரணமாக 15 நாட்கள்) வழங்கப்படும். புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கவும், வாக்கெடுப்பை நடத்தவும் அனுபவம் வாய்ந்த ஒரு உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார்.
நம்பிக்கை தீர்மானம்:
முதல்வர் “இந்த அவை என் தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது” என்ற தீர்மானத்தை முன்மொழிவார். குரல் வாக்கெடுப்பு சபாநாயகர் தீர்மானத்தை வாசிப்பார். ஆதரவு தெரிவிப்பவர்கள் “ஆம்” என்றும், எதிர்ப்பவர்கள் “இல்லை” என்றும் முழங்குவார்கள். சத்தம் அதிகமாக இருக்கும் தரப்பு வென்றதாக அறிவிக்கப்படும். (இது சர்ச்சைக்குரியது என்பதால் பெரும்பாலும் அடுத்த நிலைக்குச் செல்லும்). பிரிவு வாக்கெடுப்பு: இது மிகவும் துல்லியமானது. உறுப்பினர்கள் வரிசை வாரியாக எழுந்து நின்று தங்கள் வாக்கைப் பதிவு செய்வார்கள் அல்லது மின்னணு முறையில் பொத்தான்களை அழுத்துவார்கள்.
கொறடா உத்தரவும் அதன் தாக்கமும்:
ரகசிய வாக்கெடுப்பு நடப்பது என்பது அரிதானது. பெரும்பாலும் கட்சித் தாவல் தடைச்சட்டம் அமலில் இருப்பதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படாது. ஒவ்வொரு கட்சியும் தனது எம்.எல்.ஏ.க்களுக்கு ‘கொறடா உத்தரவு’ பிறப்பிக்கும். இதன்படி, கட்சித் தலைமை யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறதோ, அவருக்குத்தான் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். மீறி வாக்களித்தால் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் போனால், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும்.
வெற்றி அல்லது தோல்வி?
நம்பிக்கை வாக்கெடுப்பில், 118 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், முதல்வர் தனது பதவியைத் தொடர்வார். தோல்வி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், முதல்வர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் அடுத்த பெரிய கூட்டணியை அழைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.
அந்தவகையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய கூட்டணிக் கட்சிகளின் (காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்றவை) ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்து, முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார். தொடர்ந்து, 3 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.