கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!
Coimbatore Traffic Change : தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக கோவை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கோவை மாநகரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக மு. க. ஸ்டாலின் ஆகியோர் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 18) ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வருகை தர உள்ளார். இதன் காரணமாக கோவையில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் @ டி விரைவு சாலை வழியாக சிந்தாமணி புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக கோவை நகருக்குள் வரவேண்டும்.
கோவை நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள்
கோவை நகரில் இருந்து அவிநாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி ஆலை சந்திப்பு பகுதியில் யூ- டர்ன் எடுத்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் @ டி விரைவு சாலையை அடைந்து வெளியே செல்ல வேண்டும். நீலாம்பூர் பகுதியில் இருந்து கோவை நகர் பகுதிக்கு வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறமாக திரும்பி தொட்டிபாளையம், கைகோலப்பாளையம், காலப்பட்டு நான்கு சாலை, விளாங்குறிச்சி வழியாக கோவை நகருக்குள் வர வேண்டும்.
மேலும் படிக்க: கோடை வெயில் சுட்டெரிக்கும்.. இங்கெல்லாம் மழைக்கும் வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
அவினாசி சாலையில் செல்லும் வாகனங்கள்
இதே போல, கோவை நகர் பகுதியில் இருந்து அவிநாசி சாலை வழியாக வெளியே செல்லும் இலகு ரக வாகனங்கள் அவிநாசி சாலை டைடல் பார்க் சந்திப்பில் யூ- டர்ன் செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையம் வருவதையொட்டி, இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையத்தில் கால் டாக்ஸிகள் பயணிகளை ஏற்றவும், ஏற்றிச் செல்லவும் விமான நுழைவு வாயில் வழியாக வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் கவனத்துக்கு
எனவே, விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மாலை 4 மணிக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வருகை தர வேண்டும். 4 மணிக்கு மேல் வரும் பயணிகள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்துக்கு நடந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்.. லிஸ்ட் இதோ!