“அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் விஜய்யும் வீழ்ச்சி அடைவார்”.. பியூஸ் கோயல் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கும். பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது, இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர் அறிவிப்பில் எந்தத் தாமதமும் இல்லை என்றார்.
Tamilnadu Polls 2026: விஜய்க்கு தமிழக அரசியல் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் முழுமையான புரிதல் இல்லை என்றும், அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் விஜய்யும் வீழ்ச்சி அடைவார் எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இன்னமும் தங்கள் கட்சி சார்பாக்க போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறது. இதனிடையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினமே வேட்பாளர்கள் குறித்தான பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களாகும் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!
அண்ணாமலை தேர்தலில் போட்டி?
இதையொட்டி, நேற்றைய தினம் சென்னை வந்த பியூஸ் கோயல், வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து சென்னை பாஜக தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் பூயூஷ் கோயல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், ஹெலிகாப்டர் மூலமாக அவசரமாக சென்னை கிளம்பி வந்து கூட்டத்தில் பங்கேற்றார். சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என டெல்லி தலைமையிடம் கூறியிருந்த நிலையில், தற்போது அண்ணாமலை ஆலோசனை கூட்டத்திற்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக சட்டமன்ற தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதற்காக பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சி:
இதனிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திமுக ஆட்சி துரோகம் இழைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை மீண்டும் எதிர்பார்க்கிறார்கள். இந்தத் தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கும். பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது, இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர் அறிவிப்பில் எந்தத் தாமதமும் இல்லை, அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றார்.
விஜய் வீழ்ச்சி அடைவார்:
தவெக தலைவர் விஜய்க்கு தமிழக அரசியல் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் முழுமையான புரிதல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்கு சேவை செய்த பின்னரே தான் முதலமைச்சராக வர முடிந்தது. விஜய்க்கு சினிமா புகழ் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆனால் அவை வாக்குகளாக மாறாது. சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலில் எப்படி வீழ்ந்தார்களோ அந்த வரிசையில் விஜய்யும் வீழ்ச்சி அடைவார். இந்த தேர்தலில் விஜய்யால் 3 முதல் 4 தொகுதிகள் மட்டுமே வெல்ல முடியும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
திமுக அரசு மீது குற்றச்சாட்டு:
இதைத் தொடர்ந்து சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நடந்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை குற்றப்பத்திரிகை எனும் பெயரில் அச்சிடப்பட்ட புத்தகத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கை எடுக்க அதற்கான அனுமதியை மாநில அரசு அனுமதிக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்றதும் திமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.