“டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
Tamil Nadu Assembly Election: தமிழகத்தில் முதல் கட்சியாக தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சி முடுக்கி, தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்போடு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறது

சீமான்
Tamil Nadu Polls 2026: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருத்தணியில் நாளை தொடங்குகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கி இருக்கின்றன. கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வது, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு பணிகளிலும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளதால் இதுவரை இல்லாத தேர்தல் பரபரப்பு காணப்படுகிறது.
இதையும் படிக்க: “அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்!”.. இபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு..
தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல்:
அந்தவகையில், தமிழகத்தின் பெரும்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணி குழப்பம், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்களை கேட்பதால், இந்த சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம், புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகமும் தங்களது கூட்டணியில் யாரும் இணையாத காரணத்தினால், தேர்தலை தனித்து சந்திக்க தயாராகி வருகிறது. தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர் நேர்காணலை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
நாதக வேட்பாளர்கள் அறிமுகம்:
இதனிடையே, தமிழகத்தில் முதல் கட்சியாக தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சி முடுக்கி, தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்போடு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறது. இதுவரை எந்த கட்சியும் இந்த பணிகளை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக்கு எதிர்பார்த்து காத்திருக்காமல் இருப்பதால், நாதக தங்களது தேர்தல் பணிகளில் மும்மூரம் காட்டி வருகிறது.
பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்:
இதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தகட்ட பணியான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தையும் தொடங்க இருக்கிறார். இதுதொடர்பான நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணமாக திருத்தணியில் சீமான் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தி அங்கிருந்து வாகன பரப்புரையை சீமான் ஆரம்பிக்கிறார். அன்றைய தினம் சோளிங்கர், ராணிப்பேட்டையிலும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க: “அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா?”.. டெல்லியில் டிடிவி தினகரன் பேட்டி!!
சீமான் பரப்புரை பயணத் திட்டம்:
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரையிலும், 25ம் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரத்திலும், 26ம் தேதி (வியாழக்கிழமை) மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சியிலும், 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசியிலும், 28ம் தேதி (சனிக்கிழமை) காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடியிலும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.