‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!
Tamilnadu Assembly Election: திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும், மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 3வது நாளாக இன்று வேட்புமனு தாக்கல் நடந்து வரும் நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் (ஏப்.6) வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்து, தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேற்றைய தினம் தான் வேட்பாளர்களை இறுதி செய்துள்ளன. தொடர்ந்து, காங்கிரஸ் இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.
இதையும் படிக்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..
விஜய்யால் திமுகவுக்கே பாதிப்பு:
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் (தமிழக வெற்றி கழகம்) தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. விஜய்யின் அரசியல் நுழைவு ஆளுங்கட்சியான திமுகவைத்தான் பெரிதும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் ‘ஃபேக்டர்’ ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
திராவிட மாடல் – ஏமாற்று மாடல்:
திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும், மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஆட்சியில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் போராடாத தரப்பினரே இல்லை என அவர் சாடினார். 2021 தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், ‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர் விமர்சித்தார். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதாகவும், 30 சதவீத கமிஷன் பெற்றே வேலைகள் நடைபெறுவதாகப் பொதுமக்கள் குறை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மீதான பதிலடி:
கூட்டணித் தலைவர்கள் மீது வழக்குகள் இருப்பதால்தான் அவர்கள் இணைந்துள்ளனர் என்ற முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த தினகரன், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் முதலமைச்சர் பேசி வருகிறார் என்றார். தோல்வி பயத்தின் உச்சத்தில் இருப்பதால் முதலமைச்சர் இது போன்ற கருத்துக்களைக் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..
2026 தேர்தல் எதிர்பார்ப்பு:
2001 மற்றும் 2011 தேர்தல்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்த அமைதிப் புரட்சி போன்ற ஒரு மாற்றம், 2026 தேர்தலிலும் நிகழும் என்றும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.