“வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?”.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!
விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு 'இளவரசரைப் போல' முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை "மன்னராட்சி" என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய், திருமாவளவன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அசாதாரண சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசியல் முதிர்ச்சியின்றி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். “கொள்ளைப்புற வழியாகத் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் திணிக்க பாஜக முயலும் வேளையில், தவெக-வின் செயல்பாடுகள் ஆபத்தானவை” என்று அவர் எச்சரித்துள்ளார். ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் மிகவும் கவனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசாமல், ‘வாட்ஸ்அப்’ மூலம் ஆதரவு கடிதம் அனுப்பிவிட்டு பதில் கோருவது என்ன வகையான அரசியல் நாகரிகம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?
வாரிசு அரசியல் – நகைமுரண் பேச்சு:
தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
_____________________________________
தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் @TVKVijayHQ தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள்… pic.twitter.com/MNABVodFiE— Sinthanai Selvan (@sinthanaivck) May 8, 2026
இதுகுறித்து அவரது எக்ஸ் பதவில், விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு ‘இளவரசரைப் போல’ முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை “மன்னராட்சி” என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடதுசாரிகளையும், விசிக-வையும் எவ்விதத் தர்க்க நியாயமுமின்றி ஆதரவு கோரி அழைப்பது அரசியல் அறமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணவத்தின் உச்சமா கைது மிரட்டல்?
“ஆட்சிக்கு வந்த மறுநிமிடமே திமுக, அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தவெக தரப்பில் பிதற்றுவது ஆணவத்தின் உச்சம்” என்று குறிப்பிட்ட அவர், விசிக தொண்டர்களைத் தங்களின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்று தவெக-வினர் கூறுவது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் புரிதலாலும் அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைக்கத் தவறிய விஜய், தமிழ்நாட்டில் மீண்டும் ‘ரிசார்ட் அரசியல்’ கலாச்சாரத்தைக் கொண்டு வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
மக்கள் முன் உள்ள சவால்:
ஜனநாயக நெறிமுறைகளை மீறி பாஜக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயன்று வரும் சூழலில், அந்த ஆபத்தை உணர்ந்து தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே மக்கள் முன் உள்ள தற்போதைய சவால் என்று சிந்தனைச் செல்வன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். விஜய் தனது ஆலோசகர்களின் தவறான அணுகுமுறையை உணர்ந்து, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே விசிக முன்வைக்கும் கருத்தாக உள்ளது.