இபிஎஸ் குறித்த கேள்வி.. பேச்சை நிறுத்திக்கொண்ட டிடிவி தினகரன்.. நடந்தது என்ன?
TTV Dhinakaran: எடப்பாடி கே. பழனிசாமி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவரை பதில் அளிக்க விடாமல் மத்திய அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தடுத்தது பேசும் பொருளாகி உள்ளது. இதே போல, எடப்பாடி பெயரை டிடிவி தினகரன் குறிப்பிடாமல் செய்தியாளருக்கு பதிலளித்தார்.

டிடிவி தினகரன் - பியூஷ் கோயல் - நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று புதன்கிழமை (ஜனவரி 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து, டிடிவி தினகரன் மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை மரியாதை நிமித்தமாக சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை உறுதி செய்தார். இதன் பின்னர், பியூஸ் கோயல் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்தது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, டிடிவி தினகரனிடம் உங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் எனவும், எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்பது போலவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டிடிவி தினகரனை பேசவிடாமல் தடுத்த பியூஸ் கோயல்
இதற்கு டிடிவி தினகரன் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் திடீரென குறுக்கிட்டு டிடிவி தினகரனின் பேச்சை நிறுத்துவது போல, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் புறப்படலாம் எனக் கூறினார். உடனே, டிடிவி தினகரனும் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். இந்த நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகவும், கவனம் வைத்து வருவதாகவும் மாறி உள்ளது.
மேலும் படிக்க: அமமுகவை தொடர்ந்து தேமுதிகவும் தேஜ கூட்டணியில் இணைகிறதா?பிரேமலதா விஜயகாந்த் கூறுவதென்ன!
எடப்பாடியை தவிர்க்கும் டிடிவி தினகரன்
இதே போல, டிடிவி தினகரன் காரில் சென்ற போது, அவரிடம் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அதிமுக பெயரையும், எடப்பாடி பழனிசாமி பெயரையும் குறிப்பிடாமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ஏற்கிறோம் என்று பொதுவாக டிடிவி தினகரன் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக, அண்மையில் அந்த கூட்டணியில் இருந்து விலகியது.
தேஜ கூட்டணியில் இணைய போவதில்லை
மேலும், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று அந்த கூட்டணியில் இணைய போவதில்லை எனவும் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து வந்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகி இருந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி தினகரனை பதில் அளிக்க விடாமல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்”.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!