அமமுகவை தொடர்ந்து தேமுதிகவும் தேஜ கூட்டணியில் இணைகிறதா?பிரேமலதா விஜயகாந்த் கூறுவதென்ன!
DMDK Premalatha Vijayakanth: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததை தொடர்ந்து, தேமுதிகவும் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அவர் என்ன பதில் அளித்துள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் எல்ஐசி பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை உதவி மேலாளர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு என்ன நிலைமை இருக்கிறது இந்த தமிழ்நாட்டில். எனவே, எல்ஐசி பெண் மேலாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இதேபோல, சென்னையில் உணவு டெலிவரி செய்யும் நபரை மூன்று பேர் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
தேமுதிக கூறித்து தவறான தகவல்
தமிழகம் வந்துள்ள பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலுடன், தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. தற்போது வரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. வரும் ஜனவரி 24- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தேமுதிகவின் 4- ஆம் கட்ட பயணம் நடைபெற உள்ளது. தேமுதிக அலுவலகத்தில் நல்ல விஷயங்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக எந்த செய்தியும் வெளிவருவதில்லை. ஆனால், உண்மைக்கு புறம்பான செய்திகள் பூதாகரமாக மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: ‘எங்களுக்குள் பங்காளி சண்டைதான்’.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக.. டிடிவி தினகரன் பேச்சு!




தேமுதிக கூட்டணி தொடர்பாக ஆலோசனை
தேமுதிக கூட்டணி தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம். அதன்படி, தேமுதிக கூட்டணி தொடர்பாக, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி அல்லது தேமுதிக தலைமை அறிவிக்கும். எனவே, அதற்கு முன்னதாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவது என்பது முற்றிலும் தவறானது. பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் மாநாட்டுக்கு தற்போது வரை தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேமுதிகவின் எதிர்காலம். அந்த கட்சியில் உள்ள நபர்களின் எதிர்காலம் உள்ளிட்ட அவற்றை கேப்டன் என்னிடம் ஒப்படைத்து சென்றுள்ளார்.
உரிய நேரத்தில் தேமுதிக கூட்டணி அறிவிப்பு
அதற்கான தெளிவான முடிவெடுக்கும் இடத்தில் நான் உள்ளேன். எனவே, தேமுதிகவின் கூட்டணி குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் நான் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமைக் கட்சிகள் ஆகும். ஆனால், யாருடன் தேமுதிக கூட்டணி அமைக்க போகிறது என்பதை உரிய நேரத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?