பிரதமர் மோடி வருகை: எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் சென்னை விமான நிலையம்-மதுராந்தகம்!
PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் மற்றும் மாநாடு நடைபெறும் மதுராந்தகம் பகுதி ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படை குழுவின் (எஸ்பிஜி) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஜி கூடுதல் இயக்குநர் பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இதே போல, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் ஏற்றி உரையாற்ற வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜனவரி 23- ஆம் தேதி தனி விமான மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 2:15 மணியளவில் சென்னை பழைய பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து 2:25 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு 3 மணிக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, 4:30 மணிக்கு மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்து மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
எஸ்பிஜி கூடுதல் இயக்குநர் ஆய்வு
பின்னர், 5:05- க்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி செல்கிறார். இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறப்பு பாதுகாப்பு படை குழுவின் (எஸ். பி. ஜி.) கூடுதல் இயக்குனர் அமி சந்த் யாதவ் தலைமையிலான எஸ்பிஜி குழு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளது. இந்த குழுவானது சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டது.
மேலும் படிக்க: ‘பங்காளி சண்டை.. விட்டுக்கொடுக்கிறோம்’ – டிடிவி தினகரன் பேச்சு




எந்த மாதிரியான பாதுகாப்புகள்
இதில், சென்னை விமான நிலையத்தில் பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் பகுதி, பிரதமர் பயன்படுத்த இருக்கும் சிறப்பு ஹெலிகாப்டர் மற்றும் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதி, சென்னை விமான நிலையத்தில் எந்தெந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
இதே போல, பொது கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகள், பிரதமர் மோடி அமர உள்ள பகுதி, அவர் நடந்து செல்லும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் டிரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் தவெக?.. கூட்டணி நிலவரம் எப்படி உள்ளது?