விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்… 2026 தேர்தலில் புதிய கூட்டணி.. அவரே சொன்ன விஷயம்!
TVK - AMMK Alliance : 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் எனவும் அதில் அமமுக இணைவது குறித்து தற்போது முடிவு எடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார். மேலும், தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி தான் இருக்கும் என கூறியுள்ளார்.

சென்னை, செப்டம்பர் 15 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Chief Vijay) தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தெரிவித்துள்ளார். அந்த கூட்டணியில் இணைவது குறித்து இப்போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணி பலமாக இருக்கும் நிலையில், அதிமுகவில் சலசலப்புகள் இருந்து வருகிறது. இதற்கிடையில், தவெக, நாதக ஆகிய கட்சிகள் தனித்து களம் காண உள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகள் பெரும்பாலும் விஜய்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விஜய் தனித்து போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என கூறி, கூட்டணிக்கு அழைத்தார். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளும் அவருடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் விலகியுள்ளனர். இவர்கள், தவெக விஜயுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.
Also Read : ‘திருச்சியின் வளர்ச்சியை விஜய் பார்க்கவில்லை’ அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்




’விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்’
குறிப்பாக, டிடிவி தினகரன்னுக்கு முக்குலத்தோர் சமுதாயத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இவர் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது அக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், தவெக விஜயுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது. விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டு, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அவருடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டணி அமையும் பட்சத்தில், விஜயின் ரசிகர்கள், இளைஞர்கள் வாக்கும், தினகரனுக்கு முக்குலத்தோர் வாக்குகளும் தவெகவுக்கு பலமாக மாறும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படியான சூழலில், தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அமமுக பொதுச் செயலாளர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Also Read : விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?
அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், 40 வயதுக்குட்பட்டவர்கள் திரண்டனர். தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிச்சயம் உண்டு” என்று கூறினார்.