Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

Annamalai Pressmeet: சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Sep 2025 19:10 PM IST

சென்னை, செப்டம்பர் 16, 2025: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மக்கள் கூட்டம் வருவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் சீமான் பல்வேறு மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

அரசியல் கட்சிகளும் – தேர்தல் பணிகளும்:

தேமுதிகவைப் பொறுத்தவரையில், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி – இல்லம் நாடி” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். இவ்வாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தமிழகத்தில் இந்த முறை ஆழமாகக் கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக, 15 ஆண்டுகளுக்குப் பின் நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!

இதற்காக பூத் ஏஜெண்டுகள் அமைத்தல், மாவட்டச் செயலாளர் கூட்டங்கள், தேசிய பொதுச் செயலாளர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பாஜகவில் அண்மையில் மாநிலத் தலைவரில் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்:

இந்த நிலையில், செப்டம்பர் 16, 2025 அன்று சென்னை அக்கரையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, அக்டோபர் முதல் வாரம் முதல் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மோதல் முடிவுக்கு வருமா?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பார்த்ததை விட அதிக கூட்டம் – அண்ணாமலை:

மேலும், நாள்தோறும் மூன்று இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். அவரது பேச்சு பாஜகவையும் பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேசியச் ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.