Edappadi Palaniswami: டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மோதல் முடிவுக்கு வருமா?
AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள்ளிருக்கும் உள் கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கும் நிலையில் டெல்லி சென்றுள்ளார். அங்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இந்த பயணம் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெல்லி, செப்டம்பர் 16: பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு டெல்லியில் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணிகளை ஆற்றி வருகின்றன. அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரு மாதங்களாக தொகுதி வாரியாக முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு அமோக வரவேற்பு இருக்கும் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யும் என்பது தொடர்பான வாக்குறுதிகளையும் அவர் அளித்து வருகிறார்.
கட்சிக்குள் திடீர் கருத்து மோதல்
இப்படியான நிலையில் அதிமுகவில் நடந்த வரும் திடீர் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் எனவும், பிரிந்த அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இது மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பத்து நாட்கள் கெடு விதித்தார்.
Also Read: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!
அந்த கெடு நேற்று (செப்டம்பர் 15) நிறைவடைந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவிற்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது
அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லை. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை எப்படி மீண்டும் சேர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருவதால் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் பொருட்டும், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான ஆலோசனையை மேற்கொள்ளவும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மக்களின் நலன்! அமித்ஷாவின் வீட்டின் கதவை தட்டுவது தவறா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில தலைவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்ததையும், பின்னர் ஜூலை 2022 ஆம் ஆண்டு அதிமுக தலைமை அலுவகத்தை சேதப்படுத்தியதையும் ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார். எங்களுடன் நின்றவர்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம். அதிமுகவிற்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.