பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!

PM Narendra Modi Arrives Chennai and Puducherry: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!

பிரதமர் மோடி

Updated On: 

03 Apr 2026 07:48 AM

 IST

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்.9ம் தேதி நடைபெற உள்ளது. 30 தொகுதிக்கான தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அங்கு வாக்குப் பதிவு நடப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரம் தீவிரமெடுத்துள்ளது. அதேபோல், தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

பிரதமரின் பயணத் திட்டம்:

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை 3:20 மணிக்கு சென்னை வருகிறார். தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். பின், மாலை அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளார். அதன்படி, மாலை 4.15 மணிக்கு புதுச்சேரி அஜந்தா சிக்னலில் தொடங்கும் ரோடு ஷோ, ராஜா தியேட்டர் சிக்னலில் மாலை 5.15 மணிக்கு நிறைவு பெறுகிறது. புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்து, மாலை 6.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பும் பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இரவு, சென்னையில் தங்கும் பிரதமரை, பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.

பிரதமரின் ரோடு ஷோ :

பிரதமரின் இந்த ரோடு ஷோவில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் ராமலிங்கம், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதோடு, வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் பின் தொடர்ந்து அணி அணியாக பங்கேற்கின்றனர். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 30 பேரையும் பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். ரோடு ஷோவையொட்டி, அஜந்தா சிக்னல் முதல் ராஜா தியேட்டர் வரை விழாகோலம் பூண்டுள்ளது. ரோடு ஷோவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாடிகளில் இருந்து மலர் தூவி வரவேற்கவும், ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உச்சக்கட்ட பாதுகாப்பு:

ரோடு ஷோ நடக்கும் அண்ணாசாலையையொட்டி அமைந்துள்ள பாரதி வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, செட்டி தெரு, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி முழுவதும் இரும்பு வேலி போட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களும், கண்காணிப்பு கேமிராக்கள் வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை, துணை ராணுவம், உள்ளூர் போலீசார் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளைய நிர்வாகிகள் சந்திப்பு ரத்து:

இதைத்தொடர்ந்து, நாளை (ஏப்.04) காலை 11.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, தமிழக பாஜகவில் உள்ள 66 மாவட்ட தலைவர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருந்தார். இதையொட்டி, பாஜக மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சூழலில், ‘தேர்தல் பிரச்சாரத்திற்கு, மூன்று வாரங்கள் கூட இல்லை. தேர்தல் பணியில் இருக்கும் நிர்வாகிகள் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது. கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் சென்னைக்கு வரும் நேரத்தில், புதிய வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபடலாம்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சு:

மாவட்ட தலைவர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசுவதாகவும், தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் நேரத்தை வீணடிக்க கூடாது’ என, பிரதமர் மோடி கூறி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாவட்ட தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவர், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்து அறிவுரை வழங்க உள்ளார்.

இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு

சென்னையில் பலத்த பாதுகாப்பு:

சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா விமானங்களைப் பறக்கவிடக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் தங்கும் இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..