“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!

Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக..  ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!

ஆதவ் அர்ஜுனா

Updated On: 

26 Apr 2026 14:02 PM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதியை எதிர்கொள்ளத் தமிழக வெற்றி கழகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இது தொடர்பாக விஜய் இட்டுள்ள அதிரடி உத்தரவுகள் குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விரிவாகப் பேசியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிப்பதில் கட்சி மிகத் தீவிரமாக இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

முறைகேட்டிற்கும் இடமளிக்கக் கூடாது:

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், பாதுகாப்பு அறைகளைக் கண்காணிக்க 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என மொத்தம் மூன்று ஷிப்ட் அடிப்படையில் கட்சித் தொண்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஸ்ட்ராங் ரூம்களை ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக அவர் கூறினார். எந்தவொரு முறைகேட்டிற்கும் இடமளிக்கக் கூடாது என்பதில் தலைவர் விஜய் மிக உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தொகுதிக்கும் 14 வாக்கு எண்ணிக்கை முகவர்களை உடனடியாக நியமிக்கவும், அவர்களுடன் ஒரு சட்ட வல்லுநர் குழுவை இணைக்கவும் வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் மாறிய டிரெண்ட்:

தேர்தல் களம் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

சேகர் பாபு மீது நேரடித் தாக்குதல்:

தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோரிடையே ஏற்பட்ட நேரடி மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, திமுக எப்போதெல்லாம் தோல்வி பயத்தைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் ரௌடிசத்தைக் கையில் எடுப்பார்கள். முன்னாள் அமைச்சர் சேகர் பாபு 30 முதல் 40 பேரைத் திரட்டி வந்து தவெக வேட்பாளர் அசோக்கை நேரடியாகத் தாக்கியுள்ளார்” என்று சாடியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர் அசோக் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தற்போதுதான் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

பண நாயகம் vs ஜனநாயகப் புரட்சி:

திமுகவின் தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய அவர், ஒரு வாக்கிற்கு 5,000 ரூபாய் வரை திமுகவினர் விநியோகம் செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தை மட்டுமே அவர்கள் நம்பியிருப்பதாகவும் விமர்சித்தார். “ஆனால், தமிழக மக்கள் இந்த ரௌடிசத்தையும், பண விநியோகத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவெக எந்த இடத்திலும் பணம் கொடுக்கவில்லை. நாங்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஏற்படுத்திய புரட்சிக்கு ஜூன் 4-ஆம் தேதி மகத்தான ரிசல்ட் கிடைக்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?