ராஜ்ய சபா தேர்தல்.. அதிமுக-திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்!
Rajya Sabha Elections Nominations: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனுக்களை அதிமுக கூட்டணியை சேர்ந்த தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர் .

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், திமுக வசம் 4 இடங்களும், அதிமுக வசம் 2 இடங்களும் இருந்தன. இதில், அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யான தம்பி துரைக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதே போல, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் இன்று வியாழக்கிழமை ( மார்ச் 5) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தம்பிதுரை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர்களுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு
இதில், அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் பாமகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் அவர்களது வேட்புமனக்களை முன் மொழிந்துள்ளனர். பாமகவில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், 2 எம்.எல்.ஏக்கள் ராமதாஸ் அணிக்கு சென்று விட்ட காரணத்தால், 3 எம்எல்ஏக்கள் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அன்புமணி ராமதாஸ் 3- ஆவது முறையாக எம் பி ஆக உள்ளார். இதே போல, திமுக வசம் உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை ஒன்று தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷுக்கும், மற்றொன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்குக்கும், மீதமுள்ள 2 இடங்களை திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: தேமுதிகவிற்கு மீண்டும் முரசு சின்னம்.. நா.த.கவிற்கு விவசாயி சின்னம்… புதுச்சேரியில் பலத்தை நிரூபிக்குமா?
திருச்சி சிவா-கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
இவர்களை தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில், டி. ஆர். பாலு எம்.பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். கடந்த 1996- ஆம் ஆண்டு புதுக்கோட்டை எம். பி.யாக தேர்வான திருச்சி சிவா 2002, 2007, 2014, 2020- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக திருச்சி சிவா தேர்வானார். இவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிரிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த முன்னிலையில் கட்சியின் வேட்பாளர் எல். கே. சுதீஷ் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும் படிக்க: T. Nagar Constituency Election 2026: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..