தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?
வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்குப்பதிவு மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை, ஏப்ரல் 29, 2026: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஏப்ரல் 30ஆம் தேதி (நாளை) தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக:
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது. 233 தொகுதிகளில் கட்சி போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும், எடப்பாடி பகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து கட்சி அறிவிப்பு வெளியிட்டது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்குப்பதிவு மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக விஜய் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். குறிப்பாக, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று ஸ்ரீரடி சாய்பாபா கோவில் சென்று தரிசனம் செய்தார்.
நாளை தவெக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை:
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் பொதுச் செயலாளர் என். ஆனந்தன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை விஜய் வழங்க உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி இருக்க வேண்டியது போன்ற அம்சங்கள் குறித்து விளக்க உள்ளார்.
மேலும் படிக்க: நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதையும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்க உள்ளார்.