Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாருடன் கூட்டணி? பிப். 17 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த உறுதி..

DMDK Premalatha Vijayakanth: தேமுதிகவைப் பொருத்தவரையில், அதிக இடங்களை எந்த கட்சி வழங்குகிறதோ, தேமுதிகவிற்கு எந்த கூட்டணி சாதகமாக இருக்கிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, தேமுதிக திமுகவுடன் இந்த சட்டமன்ற தேர்தலில் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருடன் கூட்டணி? பிப். 17 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த உறுதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Feb 2026 07:59 AM IST

சென்னை, பிப்ரவரி 7, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) தனது கூட்டணியை அறிவிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக:

தேமுதிகவைப் பொருத்தவரையில், கேப்டன் விஜயகாந்த் மறைந்த பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும். இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை தேமுதிக சந்தித்தது. ஆனால், அதில் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது யாருடனும் கூட்டணி அமைக்காமல், விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை இதில் அடங்கும். நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றி கழகமும் தனித்து போட்டியிடும் சூழலில், அதிமுக மற்றும் திமுக தங்களின் கூட்டணிகளை 90 சதவீதம் உறுதி செய்துள்ள நிலையில், தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணி நிலைப்பாடுகளை அறிவிக்காமல் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன் கூட்டணி அறிவிக்கப்படும்:

தேமுதிகவைப் பொருத்தவரையில், அதிக இடங்களை எந்த கட்சி வழங்குகிறதோ, தேமுதிகவிற்கு எந்த கூட்டணி சாதகமாக இருக்கிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேமுதிகவிற்கு எது நல்லது, தேமுதிகவிற்கு எது பலனளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தான் கூட்டணியை அறிவிக்க முடியும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் சூழலில், அதற்குள் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக?

அரசியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, தேமுதிக திமுகவுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஆறு சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேமுதிக தரப்பில் அதிக இடங்கள் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விருதுநகரின் இன்று திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு.. முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்?

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகமும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என விஜய் தெரிவித்திருந்தாலும், தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.