வாக்குப்பதிவு இயந்திர பேலட் சீட்டில் புதிய நடைமுறை.. வாக்காளர்களுக்கு இனி குழப்பமே வேண்டாம்.. என்ன அது!
Voting Machine Ballot Sheet : தமிழகம் உள்ளபட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள பேலட் சீட்டில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம் பெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன் ஆயத்த பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, மேற்கண்ட மாநிலங்கள் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில், இறந்த வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரு இடங்களில் பதிவு கொண்ட வாக்காளர்கள் ஆகிய வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் அனைத்தும் இறுதிச் செய்யப்பட்டு இன்று திங்கள்கிழமை ( பிப்ரவரி 23) வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறாக தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திர பேலட் சீட்டில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக பேலட் சீட்டில் வேட்பாளர் புகைப்படம்
அதன்படி, தேர்தலில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர்கள், வரிசை எண், கட்சியின் சின்னம், புகைப்படம் ஆகியவை அடங்கிய பேலட் சீட் பொருத்தப்படும். இதில், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான பேலட் சீட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, பேலட் சீட் தயாரிப்பில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு, பேலட் சீட்டுகள் தெளிவாக தயாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் முறையாக பேலட் சீட்டில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.
மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு




வயது முதிர்ந்த வாக்காளர்கள் குழப்பம் இன்றி
இதன் மூலம், வயது முதிர்ந்த வாக்காளர்கள் தாங்கள் வாக்குப்பதிவு அளிக்க விரும்பும் கட்சியின் வேட்பாளரின் புகைப்படத்தை பார்த்து அதற்கு நேராக உள்ள வாக்குப்பதிவு பட்டனை அழுத்தி வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் நாட்களில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்வதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே செல்போன் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.
வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைப்பு
இதே போல, வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில், அதிக நேரம் காத்திருந்து வாக்களிப்பதை தவிர்க்கும் வகையில் ஒரு வாக்குச்சாவடியில் 1500 பேருக்கு பதிலாக 1200 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் 300 வாக்காளர்கள் குறையும் பட்சத்தில், வாக்குப்பதிவு தாமதம் இன்றி விரைவாக நடைபெற வழி வகுக்கும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்ட அடுத்த 15 அடுத்த நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு கிடைக்கும் வகையில் விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு