தொகுதி பங்கீடு பேச்சு.. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்.. முதல்வர் பிறந்தநாளில் பட்டியல் வெளியீடு!
DMK Alliance Seat Sharing Talks: திமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் வழங்கப்பட உள்ளன என்பது தீர்மானிக்கப்பட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 22) நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக டி. ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் முதல் நாளான இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தற்போது, நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடக்க இருந்தாலும், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி முடித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மட்டும் கூட்டணி கட்சிகளிடம் கையெழுத்து பெறப்படும் என்று கூறப்படுகிறது.
எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்
திமுக கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று திமுக தலைமை முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பரிதாபமான நிலையில் தவெக.. திமுக – தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி..




விசிக- ஓபிஎஸ்ஸுக்கு எவ்வளவு தொகுதிகள்
இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்ற தொகுதிகள், ஓ. பன்னீர் செல்வத்துக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதை தவிர்த்து, மீதமுள்ள 167 சட்டமன்ற தொகுதிகளில் திமுக களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, வருகிற மார்ச் 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பட்டியல் வெளியிட முடிவு
இந்த விழாவுக்கு முன்னதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக இறுதி முடிவுகளை எடுத்து மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பட்டியலை திமுக தலைமை வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட் எதிர்பார்த்திருந்த நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு கடந்த தேர்லை விட 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கி 28 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு