பரிதாபமான நிலையில் தவெக.. திமுக – தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி..
Rajendra Balaji: திமுக ஆட்சியில் அத்தியாவசிய குடும்ப செலவு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது. கோடைக்கு பணம் கொடுத்துள்ளேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். பொய்யைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அவர்கள் செய்த வேலைதான், தேமுதிகவை வளைத்த வரலாறு.
விருதுநகர், பிப்ரவரி 21: திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் லட்சிய கூட்டணியை அதிமுக அமைத்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் திமுக ஆட்சிக்கு எதிராக வீடு வீடாகச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பின்னர், தேமுதிகவின் கொள்கை மற்றும் கடந்த காலங்களில் திமுக குறித்து விஜயகாந்த், பிரேமலதா, விஜய பிரபாகரன் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேச்சுகளை பார்த்தால் இந்த கூட்டணி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!
கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி:
திமுக – தேமுதிக கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல, கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி. திமுக தேமுதிகவை எப்படி வளைத்தது என்ற வரலாறு சமூக வலைதளங்களில் அழகாக வந்து கொண்டிருக்கிறது. கேப்டன் எதற்காக கட்சியை ஆரம்பித்தார், அதற்கு மாறாக கூட்டணி சேர்ந்து விட்டு பிரேமலதா சொல்லும் காரணத்தை ஏற்காத தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அத்தியாவசிய குடும்ப செலவு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது. கோடைக்கு பணம் கொடுத்துள்ளேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். பொய்யைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அவர்கள் செய்த வேலைதான், தேமுதிகவை வளைத்த வரலாறு.
முதல்வர் கூறுவது பகல் கனவு:
திமுக ஆட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டு உள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என முதல்வர் கூறுவது பகல் கனவு. அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அரசு ஊழியர்கள் முதல் பட்டாசு தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் தான் தமிழக அரசின் நிதி நிலைமை மோசமானது. 75 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய நிலையில், ஸ்டாலின் அரசு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.
மக்கள் வாக்கு அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான்:
திட்டமிட்டு பொய்யை சொல்லி கடன் வாங்கி, அதில் லாபம் சம்பாதிக்கும் வேலையை இந்த அரசு செய்துள்ளது. இது படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை தெரிந்துள்ளதால் அவர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். மக்கள் நலனில், தேசிய நலனில் அக்கறை கொண்ட அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். திமுகவை எதிர்த்து தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி அரசியல் செய்தார். அதே திமுக எதிர்ப்பில் தான் ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று முதல்வரானார். அதிமுகவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களை சுயநலவாதிகள் என்றுதான் தமிழகம் சொல்லும்.
மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்
பரிதாபமான நிலையில் தவெக:
தவெக பரிதாபமான நிலையில் உள்ளது. அவர்களை யாருமே கண்டு கொள்வது கிடையாது. ஒரு நாள் கூத்துக்கு தவெக தாங்காது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களத்தில் நிற்கும். தனித்து நின்று 27 ஆயிரம் ஓட்டு வாங்கியவர்களுக்கெல்லாம் (மாணிக்கம் தாகூர்) அதிமுக பதில் கூற முடியாது. காங்கிரஸ் கட்சி எதுவும் இல்லாமல் வேடிக்கை காட்டுகிறது. அவர்கள் பேச்சை வேடிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.