அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு…9,500 பேர் போட்டியிட தயார்…நேர்காணல் தேதி விரைவில் அறிவிப்பு!
AIADMK Optional Petition Filing Completed: அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 9,500 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவின் பொது குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, அதிமுகவில் விருப்ப மனு கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. இந்த விருப்ப மனுக்களை தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுகவினர் பெற்று தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர்.
விருப்ப மனு திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
அதன்படி, விருப்ப மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டித்து தர வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, விருப்ப மனு பெறுவதற்கான கடைசி தேதியை இன்று டிசம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை கட்சியினர் சமர்ப்பித்து வந்தனர்.
மேலும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!




அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு-9500 பேர் விருப்பம்
இந்த நிலையில், விருப்ப மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 9, 500 பேர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் விரைவில் தொடங்க இருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது. விருப்ப மனு சமர்ப்பித்த கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெற உள்ளது.
விரைவில் நேர்காணலுக்கான தேதி
இதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதை தொடர்ந்து, விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு தேவையான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் விருப்ப மனுக்கள் பெரும் முகாம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் மேலும் சுறுசுறுப்பாக மாறிவிடும்.
மேலும் படிக்க: வடமாநில இளைஞர் மீதான தாக்குதல்.. “தமிழகத்திற்கே தலைகுனிவு” திருமாவளவன் கண்டனம்!