தொடர்ந்து 3வது நாளாக நடைபெறும் விசாரணை.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க நிர்வாகிகள்..
Karur Stampede - CBI Enquiry: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவர் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேரில் ஆஜராகி, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
டெல்லி, டிசம்பர் 31, 2025: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்காக கடந்த மூன்று நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவர் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விசாரணை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் – நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடங்குவர்.
மேலும் படிக்க: ஜன.6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவு?
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இதனை நீதிமன்றம் நிராகரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் நடைபெறும் சிபிஐ விசாரணையின் முன்னேற்றத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் ஸ்மித் சரண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றக் குழு கண்காணித்து வருகிறது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்:
இந்த நிலையில், இந்த விசாரணை தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவர் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேரில் ஆஜராகி, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். முதல் நாள் விசாரணை கிட்டத்தட்ட 9 மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. நாளையும் இந்த விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிப்பு.. 33 பேர் உயிரிழப்பு.. ஷாக் தகவல்!!
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடுக்குப்பிடி விசாரணையில் சிபிஐ அதிகாரிகள்:
குறிப்பாக, இந்த கூட்டத்திற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதா, அனுமதி எத்தனை மணிக்கு வழங்கப்பட்டது, பிரச்சாரம் எத்தனை மணிக்கு நடைபெற்றது, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததா, குழந்தைகள் ஏன் அனுமதிக்கப்பட்டனர், கூட்டம் அதிகரிக்கும் சூழலில் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.