Tamilnadu Assembly Election Result: எடப்பாடி தொகுதியில் எடுபடாத தவெக வியூகம்… ஆரம்பம் முதல் பழனிசாமி தொடர் முன்னிலை!
Tamilnadu Assembly Election Result: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இங்கு தவெக வியூகம் பெரிதளவில் எடுபடாமல் போய் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி, இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 62 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆரம்பம் முதல் தற்போது வரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதே போல, திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு முன்னிலை வகித்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் டி. செல்வம் முன்னிலை வகித்துள்ளார்.
100 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை
இதே போல, திமுக அமைச்சரவையில் உள்ள 36 அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 31 தொகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 100 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 80 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 53 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டது.
வேட்பு மனு பரிசீலனையில் மாயமான தவெக வேட்பாளர்
இதில், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையின் போது, திடீரென மாயமாகினார். இதனால், தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், சுயேச்சை வேட்பாளருமான பிரவீன் குமாருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது முழு ஆதரவை வழங்கினார்.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி தொடர் முன்னிலை
அதன்படி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை சுயேட்சை வேட்பாளருக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தொகுதியில் தமிழக வெற்றி தளத்தின் வியூகம் பெரிதளவில் எடுபடாமல் போய் உள்ளது, அதன் மூலம் கடந்த 1989- ஆம் ஆண்டு முதல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.