“விஜய் தோல்வி அடைவார்”.. அச்சத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி!
Vijay Defeat Youth Attempts Suicide: தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தோல்வி அடைவார் என்ற அச்சத்தில் அந்தக் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கத்தியால் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை முயன்றுள்ளார் .
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று திங்கள் கிழமை மே 4- ஆம் தேதி நடைபெற்றது. இதில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தோல்வியடைந்து விடும் எனவும், அதன் தலைவர் விஜய் தோல்வி அடைவார் என கிளம்பிய வதந்தியை நம்பி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் தீவிர ஆதரவாளரான மகேந்திரன் ( 28 வயது) என்பவர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வீட்டின் வெளியே நின்று கொண்டு தற்கொலை முயற்சி
மகேந்திரன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே கழுத்தில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் தீவிர ஆதரவாளராக மகேந்திரன் செயல்பட்டு வந்துள்ளார்.
விஜய் தோல்வி அடைவார் என்ற வதந்தி
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தோல்வி அடைவார் என்று கிருஷ்ணகிரி பகுதியில் வதந்தி பரவியதாக கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பிய மகேந்திரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மகேந்திரன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சிகளின் தொண்டர்கள் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்
தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளியாகி வரும் வதந்திகளை எந்த கட்சிகளின் தொண்டர்களும் நம்பி விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.