சென்னை, ஏப்ரல் 28, 2026: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வரலாறு காணாத அளவில் 85.15 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.
தமிழகத்தில் 4 முனை போட்டி:
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எப்போதும் போல இல்லாமல், இந்தத் தேர்தலில் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சுமார் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..
தேர்தல் அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி:
234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முக்கிய அம்சங்கள் என்ன?
பயிற்சி பெறும் அதிகாரிகள் பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவார்கள். தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.