திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
Edappadi Palnisamy Campaign: திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகயை கடுமையாக விமர்சனம் செய்து, கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது ஒரு வரலாறு படைத்த இயக்கம் அது மாசடைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
எடப்பாடி பழனிசாமி, ஜூலை 18,2025: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக செய்யும் தவறுகளுக்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா அடித்து கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் ஆனால் இன்று அந்த நிலை இல்லை என குறிப்பிட்டு பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளுக்கு இடையே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் தனது முதல் கட்ட பிரச்சார பயணத்தை 2025 ஜூலை 7ஆம் தேதி கோவையில் தொடங்கினார். இந்த பயணமானது வரும் 2025 ஜூலை ஒன்றாம் தேதி முடிவடைகிறது. அதேபோல ஜூலை 24ஆம் தேதி மீண்டும் தனது இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம்:
இந்த பிரச்சார பயணத்தின் போது தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளுக்கும் சென்று சாலை வளம் மேற்கொண்டு மக்கள் இடையே உரையாற்றுகிறார். அதே போல் அதிமுக அரசு செய்த சாதனைகள் மக்களுக்காக வகுத்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பிரச்சார பயணத்தின் போது கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் வருகிறார்.
Also Read: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்? தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி:
சிதம்பரத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்ட பொழுது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தக்கூட அனுமதி கொடுப்பதில்லை இவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா. அதிமுகவிற்கு வரும் கட்சிகளை இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என நேரடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு அழைத்தார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பது திமுக கூட்டணியில் பிரச்சனையை ஏற்படுத்துவதே தவிர அதில் எந்த உண்மையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Also Read: கோவையில் ஆசிரியர்கள் போராட்டம்… கோரிக்கைகள் என்னென்ன?
மறுப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி:
அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் கடந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் என்ற கட்சியே கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது கூட்டணிக்கு அழைக்கிறார். இது வஞ்சக அழைப்பு என தெரிவித்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதில்லை என்பதை குறிப்பிட்டிருந்தனர்.
திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி:
இந்த நிலையில் திருவாரூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ திமுக செய்யும் தவறுகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறது. திமுக செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று செயல்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்று ஒரு தனி தன்மை உள்ளது ஆனால் இன்று திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு செயல்பட்டு வருகிறது. திமுகவிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பணம் பெற்றதோ அன்றைக்கே அனைத்தும் முடிந்து விட்டது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தினால் உடனடியாக சீட்டுகள் குறைக்கப்படும். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அமைதியை காத்து வருகிறது. விமர்சிப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நிலவும் உண்மையை தான் சொல்கிறேன். கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது ஒரு வரலாறு படைத்த இயக்கம் அது மாசடைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு இதனை சொல்கிறேன்” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியுள்ளார்