தவெக தனிப்பெரும்பான்மைக்கு தடையான 8 மாவட்டங்கள்.. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத சோகம்!
Tamilaga Vettri Kazhagam : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், 8 மாவட்டங்களில் அந்த கட்சியில் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது தனிப்பெரும்பான்மைக்கு தடையாக அமைந்துள்ளது.

தவெக வெற்றி பெறாத 8 மாவட்டங்கள்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில், தமிழக வெற்றி கழகம் 1.58 கோடி வாக்குகளுடன் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தது. இதில், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 73 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 53 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம், சுமார் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் முதல் இடத்தை பிடித்தது. இவ்வளவு மாபெரும் வெற்றியை பதிவு செய்தாலும், தனி பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் இல்லாத காரணத்தால் சில கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டு வருகிறது.
தவெகவுக்கு கை கொடுக்காத 8 மாவட்டங்கள்
இந்த நிலையில், 108 சட்டமன்ற தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றி இருந்தாலும் 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெறவில்லை. இதில், அரியலூர், தென்காசி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறவில்லை. இது, தமிழக வெற்றி கழகத்தின் பெரும்பான்மைக்கு தடையை ஏற்படுத்தியதாகவும் கூறலாம்.
மேலும் படிக்க: வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..
8 மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக – அதிமுக
மேற்கண்ட தொகுதிகளில் தென்காசியில் 5 தொகுதியில் திமுக – தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அரியலூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக கூட்டணி மூன்று தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்தது. இதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஏற்காத தொகுதி மக்கள்
இதே போல, நீலகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும், திருவாரூரில் திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக கூட்டணி 3 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதில், ஒரு தொகுதியில் கூட தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு மேற்கண்ட தொகுதிகளின் வாக்காளர்கள் பெரிதளவில் வரவேற்பு அளிக்கவில்லை என்பதை தெரிகிறது.