வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு 3.52 விழுக்காடு மட்டுமே. இதனால், தமிழ்நாட்டு மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கை வலிமையானது என நான் கருதுகிறேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, மே 5, 2026: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் திமுகவும், மூன்றாவது இடத்தில் அதிமுகவும் உள்ளன. அதில் முக்கியமாக, தமிழக முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், தாம் போட்டியிட்ட தனது சொந்த தொகுதியான குளத்தூர் தொகுதியில் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த தோல்வியை ஏற்க முடியாமல் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் இருக்க எனக்கு என்ன கவலை – மு.க ஸ்டாலின்:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 5, 2026
இந்த சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு, நீங்கள் உடன் இருக்கும் வரை என்ன கவலை?” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறும் 3.52 சதவீத வாக்குகளே அதிகம்:
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு 3.52 விழுக்காடு மட்டுமே. இதனால், தமிழ்நாட்டு மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கை வலிமையானது என நான் கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பது நமது கடமை. எனவே, திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் உடனடியாக மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களாட்சியில் மக்களே வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் அரசியலில் செயல்படுகிறோம்.
மேலும் படிக்க: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்.. போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ்!!
திமுக ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. வெற்றியும் பார்த்தோம்; தோல்வியும் சந்தித்தோம். கொள்கையை காக்கும் பயணத்தில் நாம் எப்போதும் உறுதியாக இருப்போம். எனக்கு ஆறுதல் கூறி பலரும் செய்தி அனுப்பி வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, நீங்கள் உடன் இருக்கும் வரை என்ன கவலை?
வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து போராடுவோம்:
உங்கள் உழைப்பால் கிடைத்ததே 1.54 கோடி வாக்குகள். தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் திட்டங்கள் தீட்டுவோம்; எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்காக போராடுவோம். இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலைத் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் நாம் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!” என குறிப்பிட்டுள்ளார்.