ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
PF Contribution Limit : தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வரம்பு15000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, பிஎஃப் (PF) எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊதிய வரம்பை 30,000 ரூபாயாக உயர்த்தும் கோரிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 15,000 ரூபாய் என்ற ஊதிய வரம்பு காலத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், அதை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் (Supreme Court)முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பதினொன்று ஆண்டுகளாக மாற்றமின்றி உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி குறித்து, மத்திய அரசு மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நான்கு மாதங்களுக்குள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
30,000 ஆக உயரும் பிஎஃப் வரம்பு
பொதுநல மனுவின் விசாரணையின் போது, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 15,000 ரூபாய் என்ற வரம்பு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதாக இல்லை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. தற்போது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் தொடக்க சம்பளமே 18,000 முதல் 25,000 ரூபாய் வரை இருக்கும் நிலையில், 15,000 ரூபாய் அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகள் பல ஊழியர்களை பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முழுப் பயனிலிருந்து விலக்கி வைத்துள்ளன. பழைய விதிகளின்படி, 15,000க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு இந்த திட்டத்தில் கட்டாயமாக சேர வேண்டிய அவசியம் இல்லை. இதனால், பலர் ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வெள்ளி.. ரூ.3 லட்சத்தை நெருங்குகிறது!




இந்த சூழலில், தொழிற்சங்கங்கள் ஊதிய வரம்பை முப்பதாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அவ்வாறு உயர்த்தப்பட்டால், அதிகமான தனியார் ஊழியர்கள் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேர்ந்து, ஓய்வுக்கால வாழ்க்கைக்கு தேவையான நிதி பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் தான் இந்த ஊதிய வரம்பு ஆறாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதையும் படிக்க : வட்டியே இல்லாமல் தங்க நகைகளை அடகு வைக்க முடியுமா?.. இந்த அம்சத்தை கொஞ்சம் பாருங்கள்!
கடந்த 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பணியாளர் வைப்பு நிதி திட்டத்தில், ஆரம்பத்தில் ஊதிய வரம்பு ரூ.300 ஆக மட்டுமே இருந்தது. காலப்போக்கில் அது உயர்த்தப்பட்டாலும், தற்போதைய பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஊதிய வரம்பை திருத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், விரைவில் ஊழியர்களுக்கு சாதகமான முடிவு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.