ஆளுநரின் அதிகாரம்… தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம் – குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதில்!
Supreme Court Clarifies Powers : ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியலமைப்பில் உள்ள குழப்பம் மற்றும் மாநிலங்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியலமைப்பில் உள்ள குழப்பம் மற்றும் மாநிலங்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு நவம்பர் 20, 2025 அன்று முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) எழுப்பிய 14 கேள்விகளுக்கு நீதிமன்றம் விரிவான பதில் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஆளுநர்கள் மசோதாக்களை நீண்ட காலம் ஒத்திவைப்பது, அவர்களின் தனிப்பட்ட அதிகாரம், அமைச்சரவை ஆலோசனையின் பங்கு, நீதித்துறை மறு ஆய்வு, மற்றும் காலக்கெடு விதிக்கலாமா என அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பதாக அமைந்துளஅளது.
உச்சநீதிமன்றம் விளக்கிய முக்கிய அம்சங்கள்
1. ஆளுநரின் 3 விருப்பங்கள்
அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ், ஆளுநர் மசோதாவுக்கு விருப்பம் அளிக்கலாம், குடியரசுத் தலைவரிடம் அனுப்பலாம், மறுபரிசீலனை செய்ய சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இது தவிர ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தள்ளிப்போட முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
2. மசோதா ஒப்புதலில் அமைச்சரவை ஆலோசனை கட்டாயமில்லை
இந்தப் பகுதியில் ஆளுநர் தனிப்பட்ட விருப்ப அதிகாரம் கொண்டவர். சட்டமன்ற அமைச்சரவையின் ஆலோசனை அவரை கட்டுப்படுத்தாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.




3. ஆளுநரின் தாமதம் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது
முடிவு எடுப்பதில் ஆளுநரின் கருத்துக்கு நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், முடிவெடுப்பதில் நீண்ட தாமதம், விளக்கமளிக்காமல் இருப்பது ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தலையிடும்.
இதையும் படிக்க : சபரிமலையில் கூட்ட நெரிசல்… இனி ஒருநாளில் 75,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள்!
4. 361வது பிரிவின் விலக்கு ஆளுநரை முழுமையாக பாதுகாக்காது
ஆளுநரின் தனிநபர் பொறுப்பை பொறுத்தவரை நீதிமன்றத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர் மேற்கொள்ளும் அரசியலமைப்பு சார்ந்த செயல்கள் நீதிமன்ற ஆய்விலிருந்து விலக்கு பெற முடியாது.
5. ஆளுநருக்கு நீதிமன்றம் ‘காலக்கெடு’ நிர்ணயிக்க முடியாது
ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றம் முன்மொழிந்த 1–3 மாத காலவரையையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் அரசியலமைப்பு கூறுவதன்படி முடிந்தவரை ஆளுநர் விரிவாக முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
6. குடியரசுத் தலைவரின் முடிவை நீதிமன்றம் ஆய்வு செய்யாது
201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவின் நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது.
7. குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதிக்க முடியாது
201வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மசோதாக்களில் காலக்கெடு விதிக்க நீதிமன்றத்தால் முடியாது.
8. ஒவ்வொரு மசோதாவிற்கும் 143வது பிரிவின் கீழ் நீதிமன்றக் கருத்து தேவை இல்லை
குடியரசுத் தலைவர் தேவையான சட்ட கேள்விகளுக்கு மட்டுமே கருத்து கோரலாம். ஒவ்வொரு மசோதாவுக்கும் அவசியமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
9. மசோதாக்கள் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்த முடியாது
சட்டமாக மாறிய பின்னரே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். அமைச்சரவையில் முன்மொழியும் மசோதாக்கள் நீதிமன்றத் தலையீட்டுக்குள் வராது.
இதையும் படிக்க : அமலுக்கு வந்த புதிய வாடகை விதிமுறைகள்.. யார் இதை பின்பற்ற வேண்டும்? விதிமுறையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விவரம்..
10. 142வது பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் பங்களிப்பை மாற்ற முடியாது
ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், சட்டம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும் என்ற கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
11. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டம் அமலுக்கு வராது
அது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டிய நிலை வந்தாலும்கூட அதே விதி.
12. 145(3) பிரிவு — பதிலளிக்க நீதிமன்றம் மறுப்பு
145(3) பிரிவின் கீழ் அமர்வின் கடமை குறித்து நீதிமன்றம் பதிலளிக்க மறுத்தது. காரணம், சட்டமன்ற ஒப்புதல் தொடர்பான பரிந்துரையின் தன்மைக்கு பொருந்தாதது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
13. 142வது பிரிவின் அதிகார வரம்பு
142வது பிரிவு மூலம் நீதிமன்றம் விரிவான உத்தரவுகளை வழங்க முடியும். ஆனால், அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் 142வது பிரிவைப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
14. 131வது பிரிவு – கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
மத்திய, மாநில சர்ச்சைகள் குறித்து விசாரிக்க 131வது பிரிவு தனிப்பட்ட அதிகாரம் அளிக்கிறது. ஆளுநரின் அதிகாரம் தொடர்பான பரிந்துரைக்கு இது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது. இதனால், நீதிமன்றம் இந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்தது.