பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?
Income Tax Guide: இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் வாங்கும் பரிசுத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் வருமான வரி (Income Tax) சட்டத்தின் படி குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடந்தால் அதற்காக நம்மை வருமான வரித்துறை கேள்வி எழுப்பும். நாம் முறையான ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் நம் மேல் வழக்கு தொடரவும் வாய்ப்பிருக்கிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இல்லை பெற்றோர்களிடம் (Parents) இருந்து நிதியுதவி மற்றும் பரிசுகள் பெறுவது சாதாரணமாகும். ஆனால் பெற்றோர்களிடம் இருந்து பெரும் தொகை ஒன்றை பெற்றால் அதற்கு வட்டி செலுத்த வேண்டுமா? வருமான வரி தாக்கல் செய்யும்போது அதனை எப்படி குறிப்பிடுவது என்ற கேள்வி எழுவது இயல்பு. இந்த கட்டுரையில் 2024 முதல் 2025 ஆம் நிதியாண்டின் படி இதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பரிசுத் தொகைக்கான வரிவிலக்கு விதிகள்
இந்தியாவில் வருமானவரி சட்டம் 1961 பிரிவு 56(2)(x)ன் படி, ரூ.50,000க்கு மேற்பட்ட பரிசுகள் பொதுவாக வரிக்கு உட்பட்டவை. அதே நேரம் உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் பரிசுகளுக்கு முழுமையாக வரி விலக்கு கிடைக்கும். இதில் பெற்றோர், சகோதரர், சகோதரி, வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பேரன், பேத்தி போன்றோர் அடங்குவர். எனவே உங்கள் தந்தையிடம் இருந்து ரூ.10 லட்சத்தை உதவியாக பெறுகிறீர்கள் என வைத்துக்கொண்டால், அது நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. என்றால் அதற்கு வரி விதிக்கப்படாது.
இதையும் படிக்க : டேக்ஸ் செலுத்தும் நபரா நீங்கள்.. அதிகரிக்கும் வருமான வரி தாக்கல் மோசடி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பரிசுத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி
பரிசாக கிடைக்கும் பணத்துக்கு வரி கிடையாது என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். உதாரணமாக உங்கள் தந்தை அல்லது தாயிடம் இருந்து பெறும் பணத்தை ஃபிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். அதே போல வங்கிகளில் சேமிப்பு கணக்கில் இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமானமாக கருதப்பட்டு, அதற்காக வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக உங்கள் தந்தை உங்களுக்கு ரூ.25,000 லட்சம் பரிசாக வழங்கினால், அதாவது கடனாக இல்லாமல் நிதியுதவியாக அளிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வருமானம் பெறுகிறீர்கள் என்றால், அதற்கு வரி செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு குறித்து வரவுள்ள முக்கிய அறிவிப்பு.. டிவி, ஏசி விலை குறையுமா?
பரிசாக கிடைக்கும் பணத்துக்கு ஆவணங்கள் தேவை
சட்டப்படி பெற்றோர் தங்கள் மகன் மற்றும் மகளுக்கு அளிக்கும் பரிசுத் தொகைக்கு வட்டி தேவையில்லை. ஆனால் எதிர்காலத்தில் வருமான வரி விசாரணை வரும்போது அதற்கான சான்றுகள் தேவைப்படலாம். இதற்காக உங்கள் பெற்றோரிடம் இருந்து பணம் பெறும்போதே உதவித் தொகை, உறவு, தேதி போன்றவற்றை குறிப்பிட்டு கையெழுத்து பெற்று பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. கூடுதலாக வங்கி ஸ்டேட்மென்ட் பணப் பரிவர்த்தனைக்கான சான்றுகளை வைத்துக்கொள்ளுங்கள். வருமான வரி தாக்கல் செய்யும்போது, இதனை பதிவு செய்வது உங்களுக்கு கூடுதல் நன்மை பயக்கும்.