ஜிஎஸ்டி வரியில் வரும் மாற்றம் – எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
GST Update: பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இந்த மாற்றம் வருகிற தீபாவளிக்குள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இந்த காரணமாக மளிகைப் பொருட்களின் விலை குறையுமா என பார்க்கலாம்.

கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜிஎஸ்டியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இதனால் ஜிஎஸ்டி வரி (GST) குறையும் என்பதால் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வரி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன. அதன் படி இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 சதவிகிதமும், பொதுவான நுகர்வு பொருட்களுக்கு 18 சதவிகிதமும், மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு 28 சதவிகிதம் வரியும் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவரப்படும் நிலையில், பொருட்களின் விலை எவ்வளவு குறையும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி அமைப்பில் மாற்றங்கள்
தற்போது மேற்சொன்ன 4 வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு, புதிய மாற்றத்தின் படி 5 சதவிகிமாக குறைக்கப்படவுள்ளது. அதே போல தற்போது 28 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு 18 சதவிகிதமாக குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் தீபாவளிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு குறித்து வரவுள்ள முக்கிய அறிவிப்பு.. டிவி, ஏசி விலை குறையுமா?
எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
இந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்படும் மார்றங்களின் படி, நுகர்வோருக்கு நேரடியாக நன்மை அளிக்கும். குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறையும்.
- குறிப்பாக உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை அரிசி, காய்கறி, பழங்கள், பால் சார்ந்த பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மருந்துகள் மற்றும மருத்துவமனைகளுக்கு பயன்படுத்த பொருட்களின் விலை குறையும்.
- ஏசி, டிவி, வாஷிங்மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறையும்.
- சைக்கிள், விவாசய உபகரணங்கள், புத்தகங்கள், காப்பீடு சேவைகள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
12 சதவிகிதம் செலுத்தப்படும் பொருட்களின் விலை குறையுமா?
- தற்போது 12 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்தப்படும் பின்வரும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கன்டென்ஸ்டு மில்க், டிரை ஃப்ரூட் போன்றவற்றின் விலை குறையும்
- சாஸ், பாஸ்தா, ஜாம் போன்ற பொருட்களின் விலை குறையும்.
- பால் பவுடர், பால் டப்பா, குடை போன்றவற்றின் விலை குறையலாம்.
- மரத்தால் ஆன ப1ருட்கள், பாத்திரங்களின் விலை குறையலாம்.
- காட்டன் பைகள், ரூ.1000க்கு கீழ் உள்ள காலணிகளின் விலை குறையும்.