GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
Important Changes in GST | ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 15, 2025) அறிவித்த நிலையில், அது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

புதுடெல்லி, ஆகஸ்ட் 16 : தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி (Goods and Service Taxes) வரி விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்துள்ளார். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றத்தின் மூலம் ஐந்து விகித முறையில் இருந்து இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுதந்திர தின விழாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி
நேற்று (ஆகஸ்ட் 15, 2025) இந்தியாவில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர், நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளது. இது சாதாரன மக்கள் மீதான வரி சுமையை குறைக்கும். இது உங்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!




பிரதமர் கூறிய தகவல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி பேசிய பிறகு இந்திய நிதி அமைச்சகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதத்தின் மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முன்மொழிவை மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்த நிதியாண்டுக்கள் பெரும்பாலான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!
சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வரி சீர்திருத்தங்கள்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகமாகவுள்ள சீர்திருத்தங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பாக சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தரநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட எளிட வரி விகிதங்களை நோக்கி நகர்வது இந்த சீர்திருத்தங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும். அதன்படி, சிறப்பு விகிதங்கள் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.