இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!
RBI Claim Settlement Plan : வங்கிகளில் இருந்து இறந்த நபர்களின் பணத்தை அவர்களது உறவினர்கள் அல்லது நாமினியாக நியமிக்கப்பட்ட நபர்கள் பெறுவதற்கு மிகுந்த சிக்கலானதாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நடைமுறையை மிகவும் எளிமையாக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் நபர் உயிரிழந்தால் அவர் நாமினியாக நியமித்த நபர், அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் வங்கியில் (Bank) உள்ள பணம், லாக்கரில் பாதுகாத்த பொருட்களை பெறுவதற்கான நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருந்து வந்தது. மேலும் இந்த செயல்முறை நீண்டகாலம் தேவைப்பட்டது. இதற்காக நிறைய ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இதனை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) புதிய முடிவை எடுத்துள்ளது. அதன் படி இனி இறந்த நபர்களின் வாரிசுகள் அல்லது நாமினியா நியமிக்கப்பட்ட நபர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் பொருட்களை விரைவாகவும் எளிமையாகவும் பெற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா புதிய திட்டத்தை அறிவித்தார். அதன் படி நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி கிளைகளும் ஒரே மாதிரியா செயல்முறை, ஆவணங்கள் கேட்கும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். உறவை இழந்து தவிக்கும் துயரமான நேரத்தில் குடும்பத்தினரை தேவையற்ற நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் பணத்தை அவர்கள் எளிதில் பெறுவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.5% ஆகவே தொடரும்.. ஆர்பிஐ அறிவிப்பு!
தற்போதைய சிக்கல்கள்
ஒருவர் இறந்த பிறகு அவரது பெயரில் இருக்கும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை வாரிசுகளிடமோ அல்லது நாமினியாக நியமிக்கப்பட்ட நபரிடமோ அளிக்க ஒவ்வொரு வங்கியும் தனித்தனி நடைமுறைகளை பின்பற்றுகின்றன. குறிப்பாக அடையாள சான்று, இறந்தவருக்கும் பணத்தை உரிமைகோருபவருக்குமான சான்றுகள், இறப்பு சான்றிதழ் என ஒவ்வொரு வங்கிளும் கூடுதல் ஆவணங்களை கேட்கின்றன. வங்கிகளுக்கு இடையே ஒரே மாதிரி விதிமுறைகள் இல்லாத காரணத்தால், இறந்த நபரின் வாரிசுகள் வங்கிகளுக்கு அடிக்கடி அலைய வேண்டி தேவை இருந்தது. குறிப்பாக இறந்த நபரின் வங்கி விவரங்களை பெறுவது கூட பெரும் சவாலாக இருந்து வந்தது.
ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள புதிய நடைமுறை
இனி அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான ஆவணங்களையே கேட்க வேண்டும். சேமிப்பு கணக்குகள், லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பொருட்கள் இவற்றுக்கெல்லாம் ஒரே மாதிரியான செயல்முறை அமல்படுத்தப்படும். இந்த சேவைகள் அனைத்தையும் வாரிசுகளை அடிக்கடி வங்கிகளுக்கு வர சொல்லாமல் ஒரே முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
இதையும் படிக்க : இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.67,000 கோடி.. மத்திய அரசு தகவல்!
இதன் மூலம் இனி வாரிசுகள் தேவையில்லாத ஆவணங்கள் மற்றும் கால தாமதம் இல்லாமல் பணத்தை பெற முடியும். வங்கியின் செயல்முறை எளிமையாகி விரைவில் தீர்வு காணப்படும். வாடிக்கையாளரின் நம்பிக்கை அதிகரிக்கும். குறிப்பாக துயரமான நேரங்களில், வாடிக்கையாளர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்காமல் விரைவாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.