ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸிற்கான ஜிஎஸ்டி 18% குறைய வாய்ப்பு?
GST Relief Move : பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸிற்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று தனது சுதந்திர தின விழாவின் போது தனது உரையில் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் ஜிஎஸ்டி (GST) சலுகைகளைப் பற்றி சுட்டிக்காட்டி பேசினார். இதனையடுத்து விரைவில் இந்தியாவில் எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுள்ளது. குறிப்பாக நடுத்தர மக்களின் நிதிச்சுமை குறைய வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனை 12 சதவிகிதமாக குறைக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வருகிற 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய காப்பீட்டுக்கான தவணை விலையை குறைப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் குறைந்த விலையில் காப்பீடு பெற முடியும்.
காப்பீடு வருவாய் அதிகரிப்பு
நிதி அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட்ட தரவுகளின் படி, ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மூலம் வசூலிக்கப்படும் தவணைகளில் இருந்து பெறப்படும் ஜிஎ்டி வருவாய் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2019 முதல் 2020 நிதியாண்டில் காப்பீடு மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.2,101 ஆக இருந்தது. ஆனால் இது கடந்த 2023 -2024 நிதியாண்டில் ரூ.16,398 கோடியாக உயர்ந்தது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.




இதையும் படிக்க : 2050 ஆம் ஆண்டு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 5 சிறந்த பாதுகாப்பான முதலீட்டு வழிகள் இதோ
எளிய மக்கள் காப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்
இது தொடர்பாக யூனிவர்சல் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ ஷரத் மதுர் கூறுகையில், ஜிஎஸ்டி விகிதம் குறைந்தால் குடும்பங்களின் பொருளாதார சுமை குறையும். மேலும் இதன் மூலம் அதிகமானோர் காப்பீடு பெறுவர். இதனால் சமூக பாதுகாப்பு மேலும் வலுவடைையும் என்றார். மேலும் மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், புதிய வாடிக்கையாளர்கள் காப்பீடு பெறுவர். இதனையடுத்து அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை எளிதாக அடைய முடியும் என்றார்.
இதையும் படிக்க : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
காப்பீடு என்பது ஆடம்பரம் அல்ல. மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் 3 சதவிகிதம் என்ற குறைவான எண்ணிக்கையில் உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளால் மக்களுக்கு காப்பீடு எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இந்தியாவில் அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாத நிலையில் காப்பீடு தவணை செலுத்துவது அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவில் எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீடு விகிதத்தை குறைப்பதால் எளிய மக்கள் பயனடைவர்.