ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயரும் பிஎஃப் உச்ச வரம்பு?.. வெளியான முக்கிய தகவல்!
Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர் வருங்காலை வைப்பு நிதியின் உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமான அமைப்பு தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO – Employee Provident Fund Organization) அமைச்சகம். காரணம், இந்த அமைப்பு மூலம் ஊழியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த தொகை ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும். இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியர்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வழங்கி வரும் நிலையில், அது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கட்டாய சம்பள உச்ச வரம்பை உயர்த்த திட்டம்
தற்போதைய நிலவரப்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு பங்களிக்கப்படும் கட்டாய சம்பள உச்ச வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. இந்த தொகையை ரூ.25,000 ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு முன்னதாக இந்த உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த உச்ச வரம்பு மேலும் உயர்த்தப்பட்டு ரூ.25,000 ஆக மாற்றம் செய்யப்பட உள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு தேவையான அறிவிப்புகள் இவைதான்!
முழு தொகையும் கையில் கிடைக்கும்
தகவலின் படி மத்திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உச்ச வரம்பை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக மாற்றும் பட்சத்தில் குறைவான சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் கையில் கிடைக்கும். இது ஊழியர்கள் தங்களது நிகழ்கால வாழ்க்கையை சிறப்பான முறையில் கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இவ்வாறு பிஎஃப் தொகை பிடித்தம் செய்யபடாமல் முழு தொகையையும் சம்பளமாக வழங்குவது ஊழியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.