பிபிஎஃப் கணக்கு திறக்க போறீங்களா?.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
Public Provident Fund Account | இந்தியாவில் அதிக லாபம் தரும் பாதுகாப்பான திட்டமாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கும்போது செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் பிபிஎஃப் (PPF – Public Provident Fund) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபம் மற்றும் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் பலரும் இந்த திட்டத்தில் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தில் இருக்கும் சிறப்பு பலன்களை கருத்தில் கொண்டு ஒரு சிறிய தவறை செய்து விடுகின்றனர். ஆனால், அந்த சிறிய தவறு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் ஒரு பிபிஎஃப் கணக்கு மட்டுமே தொடங்க முடியும்
பிபிஎஃப் திட்டத்தை பொருத்தவரை ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். அதிக வட்டி கிடைக்கிறது, வரி விலக்கு வழங்கப்படுகிறது என்பதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறக்கும் பட்சத்தில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணம், பிபிஎஃப் திட்டத்தை பொருத்தவரை ஒருவரின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால் அந்த மற்ற கணக்குகள் செல்லாததாக அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப், செயலி மூலம் ஈஸியா கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம் – எப்படி தெரியுமா?




மற்ற கணக்குகளில் இருக்கும் பணம் என்ன ஆகும்?
பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம் பான் கார்டுக்கு (PAN Card) கீழ் கொண்டுவரப்படும். இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் முதலீடு செய்யப்படும் பட்சத்தில் அது எளிதில் கண்டுபிடிக்கப்படும். அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் திறக்கப்படுகிறது என்றால் மற்ற கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படாது.
இதையும் படிங்க : வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?
நீங்கள் அதிக வட்டி மற்றும் வரி விலக்குக்கு ஆசைப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறக்கும் பட்சத்தில் மற்ற கணக்குகளில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த வித வட்டியும் வழங்கப்படாமல் அசல் மட்டுமே வரவு வைக்கப்படும். அது வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி பணத்தை வரவு வைப்பது போன்றது தான். எனவே பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது இந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது.