அமெரிக்கா–ஈரான் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.. ராணுவ பதற்றம் தணிந்து, தடைகள் தளருமா?
US - IRAN MOU: இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படும். அதேபோல், அமெரிக்கா தனது சில கடற்படை கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதார தடைகளை படிப்படியாக நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 18, 2026: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பல ஆண்டுகால பதற்றத்தை குறைக்கும் நோக்கில், இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஈரான் அரசு ஊடகங்களின் தகவலின்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
“அமெரிக்கா – ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைத்து, எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான வழிகாட்டுதலாக செயல்படும் என கூறப்படுகிறது. ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, இந்த ஒப்பந்தம் இரு தரப்பினராலும் மின்னணு முறையில் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தம்:
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களின்படி, அமெரிக்கா மற்றும் ஈரான் உடனடியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி, ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது என ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளும் 60 நாட்களுக்குள் முழுமையான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படும். அதேபோல், அமெரிக்கா தனது சில கடற்படை கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதார தடைகளை படிப்படியாக நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது:
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்றும், செறிவூட்டப்பட்ட அணுப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிய அணு நடவடிக்கைகள், கூடுதல் பொருளாதார தடைகள் அல்லது புதிய ராணுவ குவிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என இரு தரப்பும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஜி-7 மாநாடு.. இந்திய மாலுமிகளின் மரணம் குறித்து பேசிய பிரதமர் மோடி!
இதனுடன், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்படுவதுடன், முடக்கப்பட்டிருந்த ஈரான் நிதி சொத்துக்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒப்பந்தம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கூட்டு மேற்பார்வை அமைப்பும் உருவாக்கப்பட உள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது மற்றும் ஈரானுக்கு பொருளாதார நிவாரணங்கள் வழங்கப்படுவது, உலக எண்ணெய் சந்தை மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.