AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமெரிக்காவில் முடங்கிய விமானப் போக்குவரத்து.. தரை கட்டுப்பாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட சிக்கலால் நாடு முழுவதும் விமானங்கள் தரையிறக்கம்!!

US Grounds All Departing Flights Nationwide: அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான கட்டுப்பாட்டு மையங்களிலும் ஏற்பட்ட தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக, நாட்டின் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி, அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முடங்கிய விமானப் போக்குவரத்து.. தரை கட்டுப்பாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட சிக்கலால் நாடு முழுவதும் விமானங்கள் தரையிறக்கம்!!
அமெரிக்க விமானங்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Nov 2026 08:26 AM IST

நவம்பர், 14: சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க நாட்டின் வான்வெளியில் திடீரென விமானப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் வான்வெளியில் கடந்த செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அரிதினும் அரிதாக அரங்கேறும் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து முடக்கம் என கூறப்படுகிறது. அந்தவகையில், அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கும் உள்நாடுகளுக்கும் இயக்கப்பட வேண்டிய அனைத்து விமானச் சேவைகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடியாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்படத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான விமானங்கள் உடனடியாகத் தரையறுக்கப்பட்டதோடு, வான்வழியில் பறந்து கொண்டிருந்த விமானங்களும் உடனடியாக பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: புதிய கொரோனா திரிபு PJ.2.1 கண்டுபிடிப்பு.. சளி, காய்ச்சல், தொண்டை வலி அறிகுறிகளா? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

தரை கட்டுப்பாட்டு மையத்தில் கோளாறு:

இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாக அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் வான்வெளித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, தரை கட்டுப்பாட்டு தளத்திற்கும் (Air Traffic Control – ATC) வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கும் இடையே இருக்க வேண்டிய முக்கியத் தொலைத்தொடர்பு வசதிகளில் திடீரெனப் பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலும், அதேபோல விமானங்களில் இருந்து ஏடிசி மையத்தைத் தொடர்பு கொள்ள முடியாத ஆபத்தான சூழ்நிலையும் உருவாகியுள்ளது. விமானப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக, இந்தத் தொடர்புத் துண்டிப்புச் சிக்கல் தீரும் வரை அனைத்து விமான இயக்கங்களையும் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் தேங்கிய பயணிகள்:

இந்த திடீர் விமானச் சேவைகள் முடக்கத்தால் அமெரிக்காவில் உள்ள குறைந்தது 12-க்கும் மேற்பட்ட முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பல விமானங்கள் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் நிலையிலேயே ரத்து செய்யப்படவோ அல்லது தாமதப்படுத்தப்படவோ செய்துள்ளன. கடந்த 5 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக அமெரிக்க வான்வெளியில் எந்தவொரு வணிக விமானமும் பறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாட்டு மையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அவசரகாலத் தரையிறக்க நடவடிக்கைகளும் வான்வெளி முடக்கமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைபர் தாக்குதல் இல்லை:

திடீரென விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் பீதியும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் துறைசார் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இது எந்தவொரு வெளிநாட்டுச் சதியோ அல்லது சைபர் தாக்குதலோ அல்ல என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இது முழுக்க முழுக்கத் தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு தொலைத்தொடர்புத் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும், வான்வெளியில் ஏற்கனவே பறந்து கொண்டிருந்த விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிக்க: வெள்ளத்தில் சிக்கிய சிம்பன்சி குரங்குகள்.. ட்ரோன் மூலம் உணவு வழங்கிய ஊழியர்கள்.. வைரல் வீடியோ!

சரிசெய்யும் பணிகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும்:

தொடர்புத் தடங்கல் ஏற்பட்ட உடனே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் தரை கட்டுப்பாட்டு மையத்தின் தொலைத்தொடர்பு அமைப்புகளைச் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பின்னரே விமானச் சேவைகள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என்றும், அதுவரை பயணிகள் விமான நிலையங்களிலேயே பொறுமை காக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நிலவி வரும் இந்த எதிர்பாராத வான்வெளிப் போக்குவரத்து முடக்கம் உலகளாவிய விமானப் பயணங்கள் மற்றும் வணிகத் தொடர்புகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us