போதைப்பொருள் அச்சுறுத்தல் நாடுகள்.. இந்தியா பெயரை சேர்த்த ட்ரம்ப்!
Donald Trump: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளை பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக அறிவித்துள்ளார். இந்த நாடுகளின் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, செப்டம்பர் 18: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா மற்றும் சீனா ஆகிய 23 நாடுகளை பெரிய அளவில் போதைப்பொருள் போக்குவரத்து அல்லது பெரிய சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் என்று பட்டியலிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது அறிக்கையில், இந்த நாடுகளில் நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் முன்னோடி ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலமாகவோ அல்லது போக்குவரத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவோ அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா,கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகியவை நாடுகளும் இடம் பெற்றிருக்கிறது.
மேஜர்ஸ் பட்டியல்
இதனிடையே வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, “மேஜர்ஸ் பட்டியல்” என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையானது அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் நுழைவதற்கான முதன்மை ஆதாரங்கள் அல்லது வழித்தடங்களாகக் கருதப்படும் நாடுகளைக் குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் உற்பத்தி மட்டுமல்ல, எல்லைகளைக் கடந்து போதைப்பொருட்களின் போக்குவரத்து பற்றியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
Also Read: பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!




இவற்றில் ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய ஐந்து நாடுகள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைத் தடுக்க கணிசமான முயற்சிகளை எடுக்கத் தவறியதற்காக தனிமைப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகள் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களின் ஒத்துழைப்பு இல்லாததைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை, மாறாக, போதைப்பொருள் உற்பத்தி அல்லது போக்குவரத்தை சாத்தியமாக்கும் புவியியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டதாக கூறியுள்ளது.
மிகப்பெரிய மூலமாக சீனா
ஒரு நாட்டின் அரசாங்கம் வலுவான மற்றும் விடாமுயற்சியுடன் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, மருந்துகள் அல்லது அதற்கு தேவையான ரசாயனங்கள் கொண்டு செல்ல அல்லது உற்பத்தி செய்ய அனுமதிக்கும் புவியியல், வணிக மற்றும் பொருளாதார காரணிகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
Also Read: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நரம்பு நோய்..விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை!
இதில் போதைப் பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் உலகின் மிகப்பெரிய மூலமாக சீனா இருப்பதாக டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார். சீனா நைட்டாசீன்கள் மற்றும் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட பிற செயற்கை போதைப்பொருட்களின் உலகளாவிய பாதிப்பை தூண்டும் ஒரு முக்கிய சப்ளையராக செயல்படுவதாக அவர் விமர்சித்தார். உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தை பயங்கரவாத நிதியுதவியுடன் தொடர்புபடுத்திய டிரம்ப், போதைப்பொருட்களின் சட்டவிரோத லாபம் உலகெங்கிலும் உள்ள வன்முறைக் குழுக்களைத் தக்கவைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.