Kachchatheevu: கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்.. இலங்கை திட்டவட்டம்!
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எழுந்துள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார்.தேர்தல் கால அரசியல் நோக்கில் இந்தக் கோரிக்கை எழுவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை, ஆகஸ்ட் 28: இலங்கை அரசின் வசம் உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் விஜித ஹெராத்திடம், கடந்த 2025, ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கேட்கப்பட்டது. அதாவது விஜய், 2025ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 800 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டிக்கும் அளவுக்கு நான் பெரிதாக எதையும் செய்யச் சொல்லவில்லை. தயவுசெய்து மிகச் சிறிய ஒன்றைச் செய்யுங்கள். அதன்படி நமது மீனவர்களின் பாதுகாப்பிற்காக கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இப்போதைக்கு மீட்டெடுங்கள். அது போதும்” என்று விஜய் பேசியிருந்தார்.
ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெராத், “ கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். மேலும் தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற அரசியல் அறிக்கைகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசு அளவில் யாராவது தெரிவித்திருந்தால் மட்டுமே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தலாம். எனவே கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதனை இந்தியாவுக்கு நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை அமைச்சர் விஜித ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர் பிரச்னையாக திகழும் கட்சத்தீவு விவகாரம் .. 1974ல் நடந்தது என்ன?




கச்சத்தீவு பிரச்னை
தமிழ்நாட்டில் போன் இலங்கைக்கும் இடையே கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தூரத்திலும் இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது இருக்கிறது. இந்த தீர்வு ஒரு காலத்தில் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. சுமார் 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கட்சி தீவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேவாலய திருவிழாவுக்கு இன்றளவும் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவ மக்கள் படகுகளில் செல்வது வழக்கம்.
இப்படியான நிலையில் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கட்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுதொடர்பான அறிவிப்பில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டின் நலனுக்காக இயற்கை வளங்களை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் கடல் எல்லையை வரையறுப்பது குறித்து இருநாட்டின் பிரதமர்களும் முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
நட்புறவு மற்றும் கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி கடற்பரப்பில் இந்திய எல்லையை கச்சத்தீவுக்கு ஒரு மைல் மேற்கு பக்கமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கச்சத்தீவுக்கு இலங்கைக்கு சொந்தமாகிறது என தெரிவிக்கப்பட்டது.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
கச்சத்தீவு இலங்கை வசம் சென்று விட்டதால் இலங்கை கடற்படையால் அப்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் படகுகளும் சிறைபிடிக்கப்படுகிறது. இதனால் கச்சத்தீவை மீண்டும் பெற்று தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகள் தேர்தலுக்கு முன் கச்சத்தீவை மீட்போம், மீட்க நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதிகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டு வருகிறது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதில் சட்டபூர்வ சிக்கலை சுட்டிக்காட்டி அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் நிராகரிக்கிறது. அப்படியான நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.