Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Katchatheevu: தொடர் பிரச்னையாக திகழும் கட்சத்தீவு விவகாரம் .. 1974ல் நடந்தது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 1974ல் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாடு அரசியலின் நீண்டகால பிரச்சனையாக உள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

Katchatheevu: தொடர் பிரச்னையாக திகழும் கட்சத்தீவு விவகாரம் .. 1974ல் நடந்தது என்ன?
கட்சத்தீவு Image Source: X
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Apr 2025 17:37 PM

தமிழக சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) கச்சத்தீவை திரும்ப மீட்க மத்திய அரசும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விவகாரம் கச்சத்தீவு (Katchatheevu) பிரச்னை தான். குறிப்பாக காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளின் மீது இவ்விவகாரத்தில் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அப்படியாக  அன்றைய காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் காணலாம்.கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் ஒரு பகுதியாகும். கடற்கரை நகரமான ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு ஒரு காலத்தில் ராமநாதபுரம் (Ramanathapuram) ராஜாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாகவும், பின்னர் அதனை இலங்கை தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு பகுதியாக அறியப்பட்ட கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்கிறது. அதனை கொடுக்கக் கூடாது என தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்கு சென்ற கதை

முன்னதாக 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை பிரதமராக இருந்த திருமதி பண்டாரநாயக் இந்தியா வந்திருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியுடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். இந்த பிரச்சனையில் உடன்பாடு காணலாம் என தீர்மானிக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கக் கூடாது அது தமிழ்நாட்டுக்கே சொந்தம் என கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து நேரில் வலியுறுத்தினார். ஆனால் திட்டமிட்டபடி இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பது என மத்திய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கும், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கும் வருகை தந்திருந்தனர். சுமார் 280 ஏக்கர் பரப்பளவு உள்ள கச்சத்தீவு ஒன்றரை மைல் நீள,அகலம் கொண்டது. அங்கு ஒரு கிறிஸ்தவ பேராலயம் இருக்கும் நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து கிறிஸ்தவ மக்கள் படகுகளில் சென்று வருகிறார்கள்.

இரு நாட்டை சேர்ந்தவர்களும் அங்கு சென்று மீன் பிடிக்கிறார்கள் ஆனால் குடிதண்ணீர் இல்லாததால் மக்கள்  நிரந்தரமாக வசிக்காமல் இருந்தனர்  கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த ராமநாதபுர மன்னர் ராமநாத சேதுபதி டெல்லி அரசின் இந்த முடிவு அதிர்ச்சிகரமானது என்றும் கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அப்போது தெரிவித்தார்.

திட்டமிட்டபடி ஒப்பந்தம்

1974 ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படுவதாக ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்து விட்டார் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெளியான அறிக்கையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் நலனுக்காக இயற்கை வளங்களை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள இரு நாட்டு பிரதமர்களும் முடிவு செய்து இரண்டு நாட்டிற்கும் இடையே உள்ள கடல் நிலையை வரையறுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கச்சத்தீவிலிருந்து ஒரு மைல் மேற்கு திசையில் இந்திய எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் 1974ல் ஜனவரி மாதம் இலங்கை பிரதமர் இந்தியா வந்து இந்திரா காந்தியுடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசியபோது, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன கருணாநிதியிடம் கேட்கப்பட்டது.

அவரோ, கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என ஆதாரங்களுடன்  பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்திற்கு கடைசி வரை பதில் வரவே இல்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடரும் பிரச்னை

மேலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாகவே பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுத்துவிட்டார் என நான் தெரிவிக்க மாட்டேன். மாநிலத்தை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எதுவும் செய்யலாம் என அரசியல் சட்டத்தில் இருப்பதால் இப்படி செய்திருக்கலாம் என முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்திருந்தார்.

இதன் பின்னர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அப்போதே மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இலங்கை அதிபர் திருமதி பண்டாரநாயக் கச்சத்தீவில் ரஷ்யா உதவியுடன் பெட்ரோல் கிணறு அமைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதே சமயம் இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தது சரிதான் என இந்திரா காந்தி பதிலளித்தார். இப்படியாக நிலைமை சென்று கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அதன் ஒப்பந்த நகலை கிழித்தெறிந்தனர். மேலும் தமிழ்நாட்டு சட்டசபையில் கச்சத்தீவு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசான திமுகவுக்கு பங்கிருப்பதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க ஒப்புக்கொண்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்றளவும் பிரச்னை என்பது தீர்வதாக இல்லை.

மீனவர்களின் வாழ்வாதாரமும், உயிரும் கேள்விக்குறியாகும் வகையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கைது செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, கொடூரமாக தாக்குவது, சுட்டுக்கொலை செய்யப்படுவது என பலவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 40 ஆண்டுகள் கடந்து மீனவர்களின் பிரச்னைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.